

இரு வேறு கொலை வழக்குகளில் துணை நடிகர் உட்பட 4 குர்றவாளிகளை ரோஷனை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி நரேந்திரநாயர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;,
திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு ரோஷனை போஸீஸார் கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த கவரிங் டாலர், ஆடைகளை புகைப்படம் எடுத்து அருகில் உள்ள கிராமங்களில் போலீஸார் அடையாளம் காண துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
இதற்கிடையே விக்கிரவாண்டி அருகே வீடுர் கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி ரெஜினா(30) என்பவர் கடந்த 11 ம் தேதிமுதல் காணவில்லை என விக்கிரவாண்டி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ரெஜினா என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியனது.
ரெஜினா காணாமல் போன நாளன்று வேம்பூண்டி கிராமத்திச் சேர்ந்த அவரது உறவினரான டிராவல்ஸ் நடத்தும் கோவிந்தராஜன்(30) என்பவருடன் கடைசியாகச் சென்றது தெரிந்து அவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ரெஜினாவிடம் வாங்கிய பணம் ரூ.90 ஆயிரத்தை திரும்பக் கேட்டதால், தனது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார்(23), திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையைச் சேர்ந்த சினிமா துணை நடிகரான ரகுமான்(25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவாடனையைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் சையது முகமது புகாரி(24) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
ரெஜினாவை விக்கிரவாண்டியிலிருந்து பட்டிணம் ஏரிக்கு காரில் அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து ரெஜினாவின் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்த பின் கழுத்தில் இருந்த 6 கிராம் தாலியை எடுத்துச் சென்றனர். அவர்கள் நான்கு பேரையும் ரோஷனை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 6 கிராம் தங்க நகைகள், 2 கார், 2 பைக், 5 செல்போன்கள், 2 சிறிய கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்களில் கோவிந்தராஜ், ராஜ்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் பட்டதாரிகள் ஆவர்.
மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 2015-ம் ஆண்டு மரக்காணம் அருகே தீர்த்தவாரி பகுதியில் இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்து கடற்கரை மணலில் புகைத்த கொலை வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
கோவிந்தராஜிடம் வேலை வாங்கித் தருமாறு பெரமண்டூரைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் பணம் கொடுத்துள்ளார். இதனை அவர் அப்போது திரும்பக் கேட்டதால், இதேபோன்று அப்போது நிர்மல்குமாரை கடந்த 2015-ம் ஆண்டு செம்படம்பர் 15-ம் தேதி கோவிந்தராஜ், தனது நண்பர்கள் ராஜ்குமார், ரகுமான் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து, கத்தியால் அறுத்துக் கொன்று தீர்த்தவாரி கடற்கரையில் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
விரைவாக குற்றவாளிகளைக் கைது செய்த ரோஷனை இன்ஸ்பெக்டர் மைகல் இருதயராஜ், எஸ் ஐக்கள் சதீஷ், பாபு, ராதாகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்டோரை எஸ்பி நரேந்திரன் நாயர் பாராட்டினார். திண்டிவனம் டிஎஸ்பி(பொ) வீமராஜ் உடன் இருந்தார்.