

ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும். அவை வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த போது அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது சிபிஐ விசாரணை தேவை என்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும்.
ஜெயலலிதா புகைப்படங்கள் வெளியிட அனுமதிக்காக காத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். அந்தப் புகைப்படங்கள் வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும். அப்போது பலரது முகத்திரை கிழியும்'' என்றார் புகழேந்தி.