

புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பது குறித்தும், அதற்கான காரணிகளை கண்டறிவது குறித்தும் மூன்று நாள் கருத்தரங்கம் சென்னையில் தொடங்கியது.
அமெரிக்காவின் புற்றுநோயியல் மருத்துவர்களும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து, புற்றுநோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்துவது குறித்த மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கம் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய்தான். ஆனால், புற்றுநோயைக் குணப்படுத்துவது என்பதைவிட அதைக் கட்டுப்படுத்துவதுதான் மிகச்சிறந்த வழியாகும். புற்றுநோய் தீவிரமடையும் முன்பே அதன் அடையாளங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதேபோல், புற்றுநோயை பரப்பும் காரணிகளைத் தெரிந்து கொள்வதும் முக்கியமாகும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் புற்றுநோயியல் மருத்துவர்களான டாக்டர் டி.எஸ்.கணேசன், அமெரிக்காவின் இ.ஹாக், எஸ்.ஸ்ட்ராம், எஸ்.மெஹண்டேல், ஆர்.மெரோட்ரா எல்.மெயர், இந்தியாவின் ஆர்.விஜயலட்சுமி, பி.ராஜாராமன், ஆர்.சின்ஹா, ஆர்.ஸ்வாமி நாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.