

ரயில் கொள்ளை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் ஸ்டாலின் பேசும் போது, ''கடந்த 9-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கக் கூடிய செய்தி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
இதுகுறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அரசு இதுகுறித்து இந்த அவைக்கு என்ன விளக்கத்தை சொல்ல இருக்கிறது என்பதைக் குறித்து விவாதிக்க வேண்டும் என நான் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறேன்.
ஏனெனில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கிட்டதட்ட 6 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நடந்திருக்கிறது. எனவே இதை அவசரம் கருதி உடனே எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.