

சென்னையில் சின்னம்மை, மெட்ராஸ் ஐ ஆகிய நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் அம்மை நோய்கள் பரவத்தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே சின்னம்மை பரவத்தொடங்கியுள்ளது. மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனையில் சின்னம் மையால் பாதிக்கப்பட்டு குழந்தைகள், மாணவர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தினமும் 3 குழந்தைகள் சின்னம்மைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இவை தவிர மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த காலக் கட்டத்தில் சின்னம்மை பரவி வருவதால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனை டாக்டர்கள் கூறியதாவது:
சின்னம்மை ஒரு தொற்று நோய். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடும். அதனால், சின்னம்மை வந்தவரை தனிமைப்படுத்த வேண்டும். அவருக்கு வீட்டிலோ அல்லது மருத்துவ மனையில் சேர்த்தோ சிகிச்சை அளிக்கலாம். சின்னம்மை ஒருமுறை வந்தால், 99 சதவீதம் மீண்டும் வராது என சொல்லப் படுகிறது. ஆனால், சின்னம் மையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மீண்டும் சின்னம்மை வந்துள்ளது. முறையாக சிகிச்சை பெற்றால், 2 வாரத்தில் சின்னம்மை குணமாகிவிடும். தேர்வு நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மெட்ராஸ் ஐ
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயும் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தினமும் 10 பேராவது கண் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருகின்றனர். இவை தவிர தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் டாக்டர் வசந்தா கூறியதாவது:
முன்பெல்லாம் மெட்ராஸ் ஐ ஒரு சில காலக்கட்டத்தில் தான் வரும். ஆனால், தற்போது அனைத்து காலக்கட்டத்திலும் மெட்ராஸ் ஐ பரவுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடும். அதனால், மெட்ராஸ் ஐ பாதித்த நோயாளிகள் உபயோகப் படுத்திய துணி உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
அடினோ வைரஸ் கிருமி மூலம் வரும் மெட்ராஸ் ஐ, கண்ணின் கருவிழியை பாதிக்கும். இவை தவிர பாக்டீரியா கிருமியாலும் மெட்ராஸ் ஐ பரவும். கண் சிவப்பது, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் வீக்கம் போன்றவை மெட்ராஸ் ஐ அறிகுறிகளாகும். கண் டாக்டரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றால், மெட்ராஸ் ஐ ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.