Published : 16 Jan 2017 09:46 AM
Last Updated : 16 Jan 2017 09:46 AM

ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரினார் பொன்.ராதாகிருஷ்ணன்

"உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படாததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இதனால் நான் கொடுத்த நம்பிக்கையையும், வாக்குறுதியையும் நிறைவேற்ற இயலவில்லை. இதற்காக தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும் கலாச்சாரத்தின் முக்கிய பங்காகவும் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ள, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வரலாற்றுப்பிழை

இந்த தடைக்கு மாற்றாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற உள்ளார்ந்த சிந்தனையுடன் பிரதமர் மோடி, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கி தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்தார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் 2016 ஜனவரி 11-ம் தேதி கெடுமதியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டாக பிரதமர் மோடி எடுத்த அனைத்து முயற்சிகளும் அன்று ஒரு நொடியில் தகர்த்தெறியப்பட்டது.

தோல்வி எனது மனதில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தினாலும் என் தமிழ் சொந்தங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியின் படி மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த உரிமை பெற்றுத்தர வேண்டும் என்று என்னுடைய முயற்சியை தொடர்ந்து வந்தேன்.

அச்சம் உள்ளது

ஜல்லிக்கட்டை நடத்த உரிய திருத்தங்களையும், ஆணைகளையும் பிறப்பிக்க மோடி அரசு தயாராக உள்ளது என்பதை அரசின் அணுகுமுறையை நன்கு உணர்ந்த அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு திருத்தம் கொண்டு வரப்பெற்று அது நீதிமன்ற தடைக்கு ஆளானால் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக முடிவு காலம் வந்துவிடும் என்ற அச்சம் விவரம் அறிந்த அத்தனை பேருக்கும் தெரிந்துள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், தமிழர் தரப்பு நியாயங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து வைத்து தமிழர்களின் வீர விளையாட்டை விளையாட அனுமதி வழங்க வேண்டி பிரதமரின் வழிகாட்டலோடு அரசு வழக்கறிஞர் ஆழமான கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்து வைத்தார்.

ஆனால், நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படாததால் உரிமையோடு ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

இது என்னுடைய மனதை மிகவும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. நான் கொடுத்த நம்பிக்கையையும், வாக்குறுதியையும் நிறைவேற்ற இயலவில்லை என்கின்ற நிலை என்னை வேதனை அடையச் செய்து தலைகுனிய வைத்துள்ளது. இதற்காக என் தமிழ் சொந்தங்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x