Last Updated : 03 May, 2017 09:48 AM

 

Published : 03 May 2017 09:48 AM
Last Updated : 03 May 2017 09:48 AM

சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு: தீப்பற்றுவதால் பட்டுப்போகும் மரங்கள்

விருதுநகரில் சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, அருகில் உள்ள மரங்களும் தீயில் எரிந்து பட்டுப் போய் வருகின்றன. புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைப்பதில் இளைஞர்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தைவிட, இருக்கும் மரங்களை பாதுகாக்கவும் அமைப்புகளை உருவாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதற்கும், வெப்ப மயமாதல் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம் இயற்கை சமன்பாடு இல்லாததே. பருவநிலையின் காவலனாக இருந்து வரும் மரங்கள் பெரும் எண்ணிக்கையில் அழிக்கப்படுகின்றன. நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு ஒரு பக்கம் இருக்க, வனப்பகுதியில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதியிலும், சாலையோரங்களிலும் உள்ள பல்லாயிரம் மரங்கள், நாகரிக வளர்ச்சி மற்றும் சாலை போக்குவரத்துக் காரணங்களுக்காக வெட்டப்படுகின்றன. இதனால், இயற்கை சமன்பாட்டில் பல்வேறு வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன.

நாடு முழுவதும் நான்குவழிச் சாலைகள் அமைக்க சாலையோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஆனால், அதற்கு மாறாக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு, செயல்படுத்தப்படவில்லை. அண்மைக் காலமாக இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது குறித்தும் இளைஞர் களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் ஏற்பட்ட விழிப்புணர்வு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய போதும், இருக்கும் மரங்களை பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

காரணம், தெருவோரம் மற்றும் சாலையோரங்களில் நான்கு வழிச்சாலை அருகே உள்ள பகுதிகளிலும் ஏராளமான குப்பைகள் தினமும் கொட்டப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சில விஷமிகளால் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், அதிலிருந்து ஏற்படும் நச்சுப்புகை மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அருகில் உள்ள மரங்களும் தீயில் எரிந்து பட்டுப் போய் வருகின்றன. இது ‘இயற்கை அன்னையை தீயிட்டு எரிப்பதற்கு சமம்’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரங்களிலும் மரத்தடி களிலும் குப்பைகள் கொட்டப் படுவதோடு, அவை எரிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதை தடுக்க இதுவரை எந்தவொரு சமூகநலன் சார்ந்த அமைப்பும் கைகோர்க்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிப்பதற்கும், இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் முயற்சியில் கை கோர்க்கும் இளைஞர்களும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க ஆர்வம் காட்டவில்லை. புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிப்பது மட்டும் இயற்கையை காப்பதாக அமையாது. இருக்கும் மரங்களைக் காப்பதிலும் அக்கறை காட்டுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என பசுமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x