Published : 31 Jan 2014 10:00 AM
Last Updated : 31 Jan 2014 10:00 AM

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: கூலிப்படையினர் உள்பட 4 பேர் கைது

சென்னையில் டாக்டர் சுப்பையா கொலை சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் 3 பேர் மற்றும் சதித் திட்டம் தீட்டிக்கொடுத்து கொலைத் திட்டத்தை நிறைவேற்றிய டாக்டரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சென்னை துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் அபிராமபுரம் பில்ராத் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த செப்டம்பர் 14–ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையாவை 3 பேர் சரமாரியாக வெட்டினர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, டாக்டர் சுப்பையா 22-ம் தேதி இறந்தார்.

குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக கொலை நடந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளின் உருவம் பதிவான சிசிடிவி காட்சி ஆதாரங்களும் கிடைத்தன. கொலை நடந்து 4 மாதங்களுக்குப் பிறகு, தற்போது கொலையாளிகள் சிக்கியுள்ளனர்.

நில விவகாரம் தொடர்பாக பாசிலின் நண்பர்கள் வக்கீல் வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். கொலையை செய்து முடித்தால் நிலத்தின் மதிப்பில் பாதியான ரூ.6 கோடியை தருவதாக ஜேம்ஸிடம் பாசில் உறுதிகூறியுள்ளார். அதன் பேரிலேயே கொலை நடந்துள்ளது. ஜேம்ஸிடம் வேலை செய்யும் முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் கூலிப்படையாக செயல்பட்டு டாக்டர் சுப்பையாவை வெட்டி கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்தது.

ஜாமீனில் வந்திருக்கும் ஆசிரியர் பொன்னுசாமி மற்றும் குடும்பத்தினரை சந்திப்பதற் காக சென்னை ராஜா அண்ணா மலைபுரம் வீட்டுக்கு புதன் கிழமை மாலை வந்த ஜேம்ஸ், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 4 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

(ரூ 6 கோடி பேரம்: கூலிப்படை வாக்குமூலம் - கடைசிப்பக்கம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x