தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மிரட்டல் விடுத்தது யார்? மும்பைக்கு விரைகிறது தனிப்படை: வீடு, கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மிரட்டல் விடுத்தது யார்? மும்பைக்கு விரைகிறது தனிப்படை: வீடு, கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்தவர் மும்பையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பெயரைக் குறிப்பிட்டு, சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று முன் தினம் ஒரு மர்ம பார்சல் வந்தது. வெடி மருந்துகள், திரியுடன் கடிதம் ஒன்றும் அதில் இருந் தது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத னுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குற்றவாளிகள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகப் பகுதியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டதுபோல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு செல்போன் எண்ணும் இருந் தது. போலீஸார் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, எதிர்முனையில் பேசியவருக்கும், மிரட்டல் கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பாஜக அலுவலகத்துக்கு வெடி மருந்து பார்சல் அனுப்பப்பட்ட தற்கு முந்தைய நாளன்று, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டுக்கும் இதுபோல ஒரு பார்சல் வந்துள்ளது. இரண்டும் ஒரே நாள், ஒரே இடத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 2 முறை செல்போனில் இருந்தும் தமிழிசைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசா ரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மிரட்டல் விடுத்த எண்ணில் ஒன்று சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இன் னொரு எண் மும்பை தானே பகுதியில் செயல்படுவது தெரிய வந்தது. அதில் பேசியவர், தான் மிரட்டவில்லை என்று கூறிவருகிறார்.

இதனால், மும்பைக்குச் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அந்த நபர்தான் மிரட்டினாரா? அல்லது அவரது செல்போனை பயன்படுத்தி வேறு யாராவது பேசினார்களா? என்பது விசாரணைக்குப் பிறகு உறுதி செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழிசை வீட்டுக்கும், பாஜக அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in