

பூந்தமல்லியில் 2 ஆண்டு களுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு விதிக் கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டது. வெறும் துண்டுச் சீட்டில் எழுதியிருந்த செல்போன் எண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக புலனாய்வு செய்த காவல் ஆய்வாளரை நீதிபதி வெகுவாகப் பாராட்டினார்.
சென்னை பூந்தமல்லி திருமால் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாபு (65). இவரது மனைவி சாந்தி (60). இவர் களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந் தனர். வீட்டில் நகை, பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந் தன. இறந்துகிடந்த பாபுவின் சட்டைப்பையில் இருந்த துண்டுச் சீட்டில் ‘சங்கர்’ என்று எழுதி, ஒரு செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. வேறு எந்த தடயமும் கிடைக்க வில்லை.
அப்போது பூந்தமல்லி காவல் ஆய்வாளராக இருந்த கே.சந்திரசேகரன், அந்த செல் போன் எண்ணை வைத்து விசாரணையைத் தொடங்கி னார். அந்த எண் கடலூரை சேர்ந்த நபருடையது. அவருக் கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது. ஒருவேளை, கடைசி எண்ணை மட்டும் கொலை யாளி மாற்றியிருக்கலாம் என்ற சந்தே கத்தில், கடைசி எண்ணை மட்டும் மாற்றி மாற்றிப் போட்டு, அந்த எண்களில் சங்கர் என யாராவது இருக்கிறார்களா? என்று ஆய்வாளர் விசாரணை நடத்தினார். இதில், சங்கர் (32) என்ற உண்மையான கொலையாளி சிக்கினார்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தனது கூட்டாளி கள் பாலு, கணபதியுடன் சேர்ந்து கணவன், மனைவியை சங்கர்தான் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளை யடித்தார் என்று தெரிந்தது. சங்கர், பாலு, கணபதி ஆகிய 3 பேருக்கும் பூந்தமல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, 3 பேரும் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாக முத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரத்தை நீதிபதி சுமார் 45 நிமிடங்கள் பொறுமையாக படித்துப் பார்த்தார்.
பின்னர் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் கே.சந்திரசேகரனை அழைத்த நீதிபதி, ‘‘சில மாதங்களில் நான் ஓய்வு பெற இருக்கும் நிலை யில், சிறப்பாக புலனாய்வு செய்த ஒரு வழக்கை சந்திக் கும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். துண்டு பேப்பரில் இருந்த செல்போன் எண், அது கொலை செய்யப் பட்ட பாபுவின் கையெழுத்து தான் என்பதற்கான ஆதாரம், கொலையாளி சங்கர் 3 முறை அந்த வீட்டுக்கு வந்து சென்ற தற்கான பக்கத்து வீட்டுக்காரர் களின் சாட்சிகள், கொலையான இடத்தில் எடுக்கப்பட்ட கைரேகைகள் என அனைத்து புலனாய்வுகளையும் மிகச் சரியாக செய்திருக்கிறீர்கள்’’ என்று பாராட்டினார்.
தொடர்ந்து, கொலையாளி கள் 3 பேருக்கும் வழங்கப் பட்ட இரட்டை ஆயுள் தண்ட னையை உறுதிசெய்து உத்தர விட்டார். காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் இப்போது மாதவரம் மதுவிலக்கு அமலாக் கப் பிரிவில் பணியாற்றுகிறார்.