

புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
பரபரப்பான துறைமுகம், அருகிலேயே ரயில் நிலையம், எந்த நேரமும் நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், நீலநிறக் கடல், இதமான காற்று, தேனீக்களைப் போன்ற மீனவர்கள் ஆகியன தனுஷ்கோடியின் பழைய அடையாளங்கள்.
1964, டிசம்பர் 22 இரவு வீசிய புயலில் தனுஷ்கோடி சின்னாபின்னமானது. துறைமுகக் கட்டிடம், பாஸ்போர்ட் அலுவலகம், ரயில் நிலையம், மாரியம்மன் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், முஸ்லிம்களின் அடக்கத்தலம் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கான மக்களையும் கடல் தன்னுள் இழுத்துக் கொண்டு ஜீவசமாதி ஆக்கியது.
புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி நோக்கி புறப்பட்ட போர்ட் மெயில் ரயில், நடுவழியிலேயே சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்டது. புயலுக்குப் பிறகு ரயிலில் எஞ்சியிருந்தது அதன் இரும்புச் சக்கரங்கள் மட்டும்தான். இதன் மூலம் அந்தப் புயலின் ருத்ரதாண்டவத்தை நாம் உணரலாம். போர்ட் மெயில் ரயிலில் இருந்த 200-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளில் ஒருவர்கூட பிழைக்கவில்லை.
புறக்கணிக்கப்பட்ட தனுஷ்கோடி புயல் தாக்கி 50 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், தனுஷ்கோடியில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும், கடலை மட்டும் நம்பி தனுஷ்கோடியைச் சுற்றி 1000-க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்ல முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சாலை வசதியுள்ளது. மூன்றாம் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு கடல் மணலில் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். பிரசவம் உட்பட எந்தவொரு அவசரத்துக்கும் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், படகுகளில்தான் 18 கி.மீ. தொலைவிலுள்ள ராமேசுவரம் மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை.
சாலைப் பணி தொடக்கம்
இந்த நிலையில், முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக முதற்கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் இந்தப் பணிக்காக கருங்கற்கள், பாறாங்கற்கள் குவிக்கப்பட்டன.
கடல் அரிப்பு மற்றும் உப்புக் காற்று பாதிப்பில் இருந்து நெடுஞ்சாலையைப் பாதுகாக்கும் வகையில், ஐஐடி ஓசோன் இன்ஜினீயரிங் துறையின் பரிந்துரை அடிப்படையில் சாலையின் இருபுறமும் ‘gabion boxes’-களும் அமைக்கப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி இந்து’-வுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்...
சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ள தனுஷ்கோடி மக்கள் சார்பில், அதன் கிராமத் தலைவர் மாரி கூறியது:
தனுஷ்கோடியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், விளிம்பு நிலையில் மீனவர்கள் வாழ்ந்து வருவது குறித்து, சிறப்புக் கட்டுரைகள், செய்திகள் மூலமாக ‘தி இந்து’ வெளியுலகுக்கு உணர்த்தியது. இதன் காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. புயலில் அழிந்த தனுஷ்கோடிக்கு புத்துயிர் கொடுத்த ‘தி இந்து’-வுக்கு தனுஷ்கோடி மீனவ மக்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்’ என்றார்.