

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது: மு.க.ஸ்டாலின் (திமுக): இலங்கையில் நடந்த இனப் படுகொலை, மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையிலும், ஐ.நா.மேற்பார்வையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக சார்பில் வரவேற்று வழிமொழிகிறேன். ரங்கராஜன் (காங்கிரஸ்): தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். சந்திரகுமார் (தேமுதிக): நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை தேமுதிக சார்பில் ஆதரிக்கிறோம். சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்ட்): இலங்கைத் தமிழர்கள் சமவாய்ப்பு, சமஉரிமை பெறுவதற்கு இலங்கை மீது இந்திய அரசு ராஜ்ஜிய ரீதியிலான அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. சரத்குமார் (சமக), ஜவாஹிருல்லா (மமக), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (குடியரசுக் கட்சி) ஆகியோரும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், 'காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது' என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை பேரவைக்கு எடுத்து வந்திருந்தனர். கிருஷ்ணசாமி வெளியேற்றம்... புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, வேறொரு விஷயத்தைப் பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து பேசியதால் டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.