

# புதுச்சேரி தொகுதியில் ஆண்களைவிடப் பெண்கள் எண்ணிக்கை அதிகம். இதற்கான காரணத்தைக் கேட்டால் பகீர் என்றிருக்கும். புதுச்சேரியில் தேநீர்க் கடைகளைவிட மதுக் கடைகள் அதிகம். இதனால், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆண்கள் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளதால்தான் இங்கு பெண்கள் விகிதம் அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. எனவே, அரசு மதுக் கொள்கையில் மாற்றம் செய்து, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கை.
# புதுச்சேரி விமான நிலையம் செயல்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. அதை விரிவுபடுத்திச் செயல்படுத்தினால் தொகுதி மேலும் வளர்ச்சி பெறும்.
# ஏ.எஃப்.டி. டெக்ஸ்டைல் மில் நடத்துவதில் பிரச்சினை உள்ளது. தானே புயலுக்குப் பிறகு முடங்கிக்கிடந்த மில், சமீபத்தில்தான் செயல்படத் தொடங்கியது. ஆனாலும், பழைய உற்பத்தி கிடையாது. மில்லை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ. 500 கோடி நிதி கேட்டுத் தொழிற்சங்கத்தினர் டெல்லி வரை சென்றனர். பலன் இல்லை. ஏ.எஃப்.டி. மில் மூலம் ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில்லாத படித்த தொழில்திறன் உள்ள புதுச்சேரி இளைஞர்கள் பயன்பெற முடியும்.
# மீனவர் பிரச்சினை தீராத ஒன்று. இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களில் காரைக்கால் மீனவர்களும் அடங்குவர். இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் நடக்கும் என்றனர். ஆனால், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் நாராயணசாமி அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் மீனவர்கள். மேலும் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் காரைக்கால் மீனவர் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
# புதுச்சேரியில் சோலைநகர் உட்பட பல கிராமங்களில் கடல் அரிப்புப் பிரச்சினைகள் அதிகம். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# வீராம்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 300 வீடுகளை மகாராஷ்டிர அரசு கட்டித் தந்துள்ளது. மீதம் உள்ள 1,200 பேருக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
# விவசாயத் துறையின் கீழ்தான் மீன்வளத் துறை இருக்கிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலம் காக்கத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்கின்றனர் மீனவர்கள்.
# புதுச்சேரியில் பெரிய அளவு தொழிற்சாலை இல்லை. மதிப்புக் கூட்டப்பட்ட வரி, சலுகைகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் நிறைய சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. விலைவாசி உயர்ந்துவருகிறது.
# சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வெளி மாநிலத்தவரையும் வெளிநாட்டினரையும் மேலும் கவர்ந்திழுக்க வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் பெரிய சுற்றுலாத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் உள்ளூர் மக்களுக்குக் கணிசமான வேலைவாய்ப்பு பெருகும்.
# புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், மொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தாலும், முக்கிய நடவடிக்கைகளுக்குத் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. மாநில அந்தஸ்து கேட்டு சட்டப் பேரவையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கையில்லை.
# ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு என இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.