Published : 06 Feb 2014 08:02 PM
Last Updated : 06 Feb 2014 08:02 PM

கோவை: பரிதவிப்பில் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகளும், 35 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்களும் உள்ளனர். இவர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாவு நூலை, பக்குவமாய் நெய்து கொடுத்து வருகின்றனர். 1980 வாக்கில் கோவையில் பரவத் துவங்கிய இந்த விசைத்தறி நெசவு தற்போது குறிப்பிடப்படும் படியான முக்கியத் தொழிலாக மாறியுள்ளது.

இந்த தொழில் மறைமுகமாக லட்சக்கணக்கான விசைத்தறிக் கூட தொழிலாளர்களுக்கு வாழ்வளித்து வருகிறது. இப்படிப்பட்ட நெசவுத் தொழில கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளால் சுணக்கம் கண்டுள்ளது. அரசு அறிவித்துள்ள மின் கட்டணம் நேரடியான பிரச்சினையை தந்துள்ளது. மின் கட்டணம் உயர்வு, விலைவாசி, உதிரிப்பாகங்களின் விலையேற்றம் என தவிக்கிறது விசைத்தறி நெசவு.

இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், தறிகளை மூடிவிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு கொடுக்கும் கூலியை உயர்த்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் நெசவு என்ற முறை 1991லேயே வந்துவிட்டாலும், ஒப்பந்தம் செய்ய கால நிர்ணயம் ஏதும் கடைபிடிக்கவில்லை. இதை காரணம் காட்டி கூலியை உயர்த்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கூட்டுக் கமிட்டி சார்பில் ஜன.6ம் தேதி ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் ஜன.23 மற்றும் 30ம் தேதியும், கோவையில் ஜன.27 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

தொழிலாளர் துறை ஆணையர் முன்னிலையில் இரு மாவட்டத்திற்கும் சேர்த்து பிப்.4ம் தேதி கோவையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை பிப்.11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூலி உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றனர். கூட்டுக் கமிட்டி சார்பில் நாங்கள் இதனைக் கண்டிக்கிறது. பிப்.11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டால் மட்டுமே எங்களின் கூலி உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றனர்.

விலைவாசியை உடனடியாக குறைக்க முடியாது என்ற நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் கூலியை உயர்த்திக் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், ஜவுளி உரிமையாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையை புறக்கணிக்கின்றனர். இந்த நடைமுறை தொடர்ந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த பேச்சுவார்த்தையையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில், பிப்.12ம் தேதி விசைத்தறி உரிமையாளர் ஒன்று கூடி வேலைநிறுத்தம் அறிவிக்க உள்ளனர். இதனால் பல கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x