போயஸ் கார்டனிலோ ரூ.1.25! ஆலந்தூரிலோ ரூ.6.15 !

போயஸ் கார்டனிலோ ரூ.1.25! ஆலந்தூரிலோ ரூ.6.15 !
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விதிக்கப்படுகிற வீட்டுவரி உள்ளிட்ட வரிகளுக்கும், மாநகராட்சியின் மையப்பகுதியில் விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையே பாரபட்சம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாநக ராட்சியின் வணிக வளாகங்களின் வாடகையை உயர்த்தும் மாநகராட்சி, அப்பகுதியில் அதிகமாக வசூலிக்கப்பட்டு வரும், வீட்டு வரி, வணிக வளாக வரியைக் குறைக்க முன் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு, பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

கடந்த 2011 ம் ஆண்டு சென்னை மாநகராட்சியோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் 25 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டன. அதன் விளைவாக,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது, 426 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்து உள்ளது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள, முந்தைய நகராட்சி பகுதிகளில், தமிழகம் முழுவதும் 2008 ம் ஆண்டு, சென்னை தவிர மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, வணிக வரிகள் தான் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, விரிவாக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: எங்கள் பகுதிகள், சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக போகிறது. ஆனால், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, வீட்டு வரி, வணிக வளாக வரி கட்டணம் எங்கள் பகுதிகளில் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, நகராட்சி பகுதிகளாக இருந்த போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே, மாநகராட்சி அதிகாரிகள் வசூலிக்கிறார்கள். இக்கட்டணம், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, மூன்று மடங்கு அதிகம்.

விரிவாக்கப்பட்ட பகுதியான அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட, 91வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி காங்கிரஸ் தலைவருமான பி.வி. தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாவது:

ஆலந்தூர், அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில், அப்பகுதிகள் நகராட்சிகளாக இருந்த போது, வீட்டு வரி, ஆலந்தூரில், ஒரு சதுர அடிக்கு ரூ.1.50 முதல் ரூ.6.15 வரையும், அம்பத்தூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.1.70 முதல் ரூ.3.38 வரையும், திருவொற்றியூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.4 ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில், 60 பைசா முதல், ரூ.1.25 வரை, வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வடசென்னை பகுதிகளில் 60 பைசா, 80 பைசா என்கிற ரீதியிலும், போயஸ் கார்டன், கோபாலபுரம், பெசன்ட் நகர், அடையாறு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 1. 25 எனவும் மாநகராட்சி வரி வசூலிக்கிறது.

அதே போல், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள வணிக மால்களுக்கு, ஒரு சதுர அடிக்கு ரூ.6.40 யை வரியாக வசூலிக்கும் சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மற்றும் அம்பத்தூர் மண்டல பகுதிகளில் உள்ள காய்கனி மற்றும் மளிகை கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.12.15, ரூ. 9 என, வரியாக வசூலிக்கிறது.

இதுகுறித்து, மாநகராட்சி கூட்டத்தில் எடுத்துக்கூறியும், எந்த பலனும் இல்லை.

ஆனால், விரிவாக்கப்பட்ட பகுதிகளில், அதிகமாக வசூலிக்கப்படும் வரியை குறைக்க முன் வராத மாநகராட்சி நிர்வாகம், அப்பகுதிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் வாடகையை மட்டும் உயர்த்துகிறது. அதற்கு உதாரணமாக, கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், அம்பத்தூர் மண்டலத்தில், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, இளங்கோ நகர் ஆகிய பகுதிகளில், 65, 80, 100, 120, 130, 180 ஆகிய சதுரடி அளவுகளில் உள்ள, 105 கடைகளுக்கு, புதிய சந்தை விலை அடிப்படையில், வாடகை நிர்ணயிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கூறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in