

கட்டிட வேலைக்காக கத்தார் சென்ற விருதுநகர் தொழிலாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை மீட்டுத் தருமாறு, அவரது மனைவி ஆட்சியரிடம் நேற்று மனு கொடுத்தார்.
விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள சேடபட்டியைச் சேர்ந்தவர் பி.செல்லத்துரை (44). செண்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (38). பட்டாசுத் தொழிலாளி. இவர்களுக்கு மகள் சரண்யா (20), மகன் ராஜேஸ்குமார் (17) உள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள ஏஜெண்ட் மூலம் செல்லத்துரை கட்டிட வேலைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கத்தார் சென்றார். அடுத்த 3 மாதத்தில் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்ட செல்லத்துரை, பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின்பேரில் போலீஸார் தன்னை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின், அவரி டமிருந்து எந்த தகவலும் இல்லை. ராஜம்மாளுக்கு பணம் அனுப்பவும் இல்லை.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ராஜம் மாளை செல்லத்துரை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பெண் கொலை வழக்கில் இதுவரை வாய்தா பெற்றுவந்ததாகவும், தற்போது இந்த வழக்கில், தனக்கும் மற்ற இருவருக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளதாகவும், 40 நாட்களில் தண்டனையை நிறைவேற்ற உத்தர விட்டுள்ளதாகவும், செய்யாத கொலைக்கு தான் தண்டனை அனுபவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, தனது கண வரை உயிருடன் மீட்டுத் தரும்படி, விருதுநகர் ஆட்சியர் வே.ராஜா ராமனை சந்தித்து ராஜம்மாள் நேற்று முறையிட்டார். விவரத்தை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து சட்டரீதியாக நடவடி க்கை எடுப்பதாகவும், உரிய முயற்சி மேற்கொள்வதாகவும் கூறினார்.