

தீபாவளிக்கு ஷாப்பிங் சென்று பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த கணவன் - மனைவி இருவரும் கார் மோதி பலியானார்கள்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தர் (30). இவரது மனைவி சுலோச்சனா (26). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தீபாவளிக்கு ஷாப்பிங் செய்வதற்காக 21-ம் தேதி மாலையில் தரும், சுலோச்சனாவும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி விட்டு இரவு 10 மணியளவில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். செம்மஞ்சேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது, அவர்களின் பைக் மீது அந்த வழியாகச் சென்ற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தரும், சுலோச்சனாவும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
விபத்து நடந்த இடத்துக்கும், தரின் வீட்டுக்கும் சுமார் 100 மீட்டர் தூரமே இருந்தது. இறந்து கிடந்த இருவரின் உடல்கள் அருகே புதுத்துணியும், பட் டாசுகளும் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்து அவர்களின் குழந்தைகளும், உறவினர் களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கிண்டி போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.