Published : 14 Oct 2013 09:10 PM
Last Updated : 14 Oct 2013 09:10 PM

அமெரிக்க கப்பல் சிறைப்பிடிப்பு: அறிக்கை கேட்கும் மத்திய அரசு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு, தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

“எங்களுக்கு முழுமையான அறிக்கை வேண்டும். கப்பலில் ஆயுதங்கள் உள்ளதோடு, இந்தியாவில் டீசல் வாங்கப்பட்டதாக கூறப்படுவதால், இது மிக முக்கிய விவகாரம்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர்.

அதைத் தொடர்ந்து, அந்தக் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து தீவிர சோதனை நடத்தினர். மேலும், அதில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடலோர காவல் படையினர் மட்டுமின்றி, இந்திய கடற்படையினர், ஐ.பி., கியூ பிரிவு உள்ளிட்ட மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அக்கப்பல் வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் அட்வன் போர்ட் என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியா என்ற கப்பல் என தெரியவந்தது. கடல் கொள்ளையர்கள் போன்ற ஆபத்துகளில் இருந்து சரக்குக் கப்பல்களை பாதுகாக்க இந்த கப்பல் துணைக்குச் செல்லுமாம்.

அந்தக் கப்பலில் 35 நவீன துப்பாக்கிகள் இருந்தன. மேலும், 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். இதில் ஒரு தமிழர் உள்ளிட்ட சில இந்தியர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தென் தமிழக கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நிலையில் ஆயுதம் ஏந்திய கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கப்பல் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

35 பேர் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில், அந்த கப்பலில் உள்ள 25 பாதுகாவலர்கள் மற்றும் 10 சிப்பந்திகள் மீது அளவுக்கு அதிகமாக ஆயுதங்கள் வைத்திருந்தது, தோட்டாக்களை வைத்திருந்தது, நடுக்கடலில் சட்டவிரோதமாக டீசல் பரிமாறியது, குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக இந்திய கடல் பகுதியில் இருந்தது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முக்கிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. இது வெளிநாடு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸார் வழக்குப் பதிந்துள்ளதை தொடர்ந்து அந்த கப்பல் தூத்துக்குடியை விட்டு கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அமெரிக்க கப்பல் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x