Published : 02 Jun 2017 11:54 AM
Last Updated : 02 Jun 2017 11:54 AM

சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர் பொதுவாழ்வில் நூற்றாண்டு காணட்டும்: ராமதாஸ்

சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர் பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் சேவையாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "திமுக தலைவர் கலைஞரின் 94-வது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்.

94-ஆவது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது தான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.

கலைஞருக்கும், எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக்காகவும், செயத்தக்க அல்லவற்றை செய்தமைக்காகவும் கலைஞரை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களை கலைஞர் ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது.

அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியின் கலைஞர் செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது.

தமிழகத்தைக் கடந்து அகில இந்திய அரசியலிலும் கலைஞர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கலைஞருக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x