

சென்னை துரைப் பாக்கத்தைச் சேர்ந்த அசல் ஜெசீமா என்ற வாசகி ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுக்கான கட் ஆப் மதிப்பெண்ணை கல்லூரிகள், பாடப்பிரிவுகள், இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கு இந்த கட் ஆப் மதிப்பெண் விவரம் பெரிதும் உதவியாக இருக்கும். நடப்பு ஆண்டுக்கான கட் ஆப் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
எம்இ, எம்டெக் படிப்புக்கான டான்செட் பொது நுழைவுத்தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. பிஇ, பிடெக் படிப்பைப் போன்று எம்இ, எம்டெக் படிப்பு களுக்கான முந்தைய ஆண்டுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் எந்தெந்த கல்லூரி களை தேர்வுசெய்யலாம் என்று உத்தேசமாக யூகிக்க மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.