

விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி வருமான வரித்துறையினர் அனுப்பி யுள்ள சம்மனை ரத்து செய்யக்கோரி மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் எஸ்.கீதா லட்சுமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுகுமாரும் டாக்டர். தற்போது தமிழ் நாடு மருத்துவ பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கிறேன். இதற்கு முன்பாக மருத்துவக் கல்வி இயக்குநராக பணிபுரிந்தேன். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி காலை 6.30 மணி முதல் ஏப்ரல் 8-ம் தேதி காலை 6.30 மணி வரை வருமான வரித்துறையினர் எனது வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வருமான வரித்துறைச் சட்டம் பிரிவு 131 ன் படி வருமான வரித் துறை துணை இயக்குநர் எனக்கு ஏப்ரல் 7-ம் தேதி ஒரு சம்மன் அனுப்பி வைத்துள்ளார். அதில், ஏப்ரல் 10-ம் தேதி காலை 11.30 மணிக்கு என்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகச் சொல்லியிருந்தார். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 12-ம் தேதிக்கு வரச்சொல்லி இருக்கின்றனர்.
ஆனால், அந்த சம்மனை அவர் கள் எனக்கு சட்டப்படி அனுப்பி வைக்க எந்த அதிகாரமும் கிடை யாது. சோதனை நடத்தி முடிப்பதற்கு முன்பாகவே எனக்கு சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். இது சட்டப்படி செல்லாது. மேலும் அந்த சம்மனில் சோதனை குறித்தோ அல் லது எதற்காக ஆஜராக வேண்டு மென்றோ எந்த விவரமும் குறிப்பிடப் படவில்லை. வெறுமனே ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்மன் இயந்திரத்தனமாக தயாரிக்கப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை முன்பாக எனக்கு எதிரான நடவடிக்கைகள் நிலுவை யில் இருந்தால் மட்டுமே வருமான வரித்துறைச் சட்டம் பிரிவு 131 ன்படி சம்மன் அனுப்பி விசாரிக்க முடியும். அதுபோல எந்தவொரு நடவடிக்கையும் நிலுவையில் இல்லை.
எனவே சட்டவிரோதமாக வருமானவரித் துறையினர் எனக்கு அனுப்பி வைத்துள்ள சம்மனை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், இது தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும்வரை வரு மான வரித்துறையினரின் நட வடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.