

வடகிழக்குப் பருவமழை தொடங் கும் முன்பாகவே வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.
சொந்த ஊரிலேயே பிள்ளை குட்டிகளோடும், பெட்டி படுக்கைகளோடும் லட்சக்கணக் கானவர்கள் அகதி களானார்கள். சென்னை மட்டு மன்றி டெல்டா மாவட்டங்கள், கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் வெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்தாண்டு மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், வெள்ளப் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்று அண்மையில் அறிக்கை மூலம் கேட்டிருந்தேன். இதற்கு அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கவுள்ளது குறித்தும், வெள்ளப் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். வரும் காலங்களில் பெருவெள்ளப் பாதிப்பு தொடராமல் தடுக்க, தகுதி வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், மாநில மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் வசந்திதேவி, கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, திருநங்கை செயல்பாட்டாளர் சங்கரி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வட சென்னையில் கடந்த ஆண்டு போல மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுகம் ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதிமுக அரசு வெள்ளத் தடுப்பு சம்பந்தமாக முக்கியமான இந்தப் பாடத்தை இன்னமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. நீதிமன்றம், பத்திரிகைகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பும் சுட்டிக்காட்டிய பிறகும் அதிமுக அரசு செயலற்றிருந்தால், தீராப்பழி வந்து சேரும். சென்னை மாநகர் இன்னொரு பேரிடரைத் தாங்காது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை மாநகர் இன்னொரு பேரிடரை தாங்காது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.