

விஜயகாந்த் ரசிகர் மன்றம், ஆரம்ப கால தேமுதிகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் தற்போது விஜயகாந்தை சந்தித்து மீண்டும் தேமுதிகவில் இணைந்து வருகின்றனர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன், அருண்பாண்டியன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகினர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகிய மேலும் 3 எம்எல்ஏக்களும் அக்கட்சியிலிருந்து வெளியேறினர்.
இதற்கிடையே, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் மேலும் சில முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் கட்சியைக் காப்பாற்றி, வலுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், விஜயகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் ஆரம்ப கால தேமுதிகவில் இருந்து பின்னர் வெளியேறிய நிர்வாகிகள், தற்போது விஜயகாந்தை சந்தித்து மீண்டும் தேமுதிகவில் இணைந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர், தேமுதிகவின் முன்னாள் மாநில அமைப்புச் செயலாளருமான திருச்சி கொ.தங்கமணி.
‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: ரசிகர்களின் பலத்தை நம்பி விஜயகாந்த் கட்சி தொடங்கினார். அதை உண்மையாக்கும் வகையில், லட்சக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். விஜயகாந்தை முதல்வராக்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம்.
நிர்வாகிகளுக்கு நெருக்கடி
ஆனால், கட்சியில் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் இருந்த சந்திரகுமார் உள்ளிட்டோர், மற்ற நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். எங்களைப் பற்றி தவறான தகவல்களை தலைமைக்கு கொடுத்தனர். இதனால் நான் உட்பட ஏராளமான நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறினோம்.
அதன்பின் சிலர், தேமுதிகவைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள முயன்றனர். அது முடியாததால் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். அத்துடன், மேலும் சில நிர்வாகிகளை இழுத்து, தேமுதிகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விஜயகாந்துக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவரது கரத்தை வலுப்படுத்துவதற்காக, திமுகவிலிருந்து விலகி கடந்த 14-ம் தேதி விஜயகாந்தைச் சந்தித்து தேமுதிகவில் இணைந்தேன். என்னைப் போலவே, ரசிகர் மன்றத்திலிருந்து கட்சிக்கு வந்து, மாவட்டச் செயலாளர்களாக இருந்த திண்டுக்கல் வி.எம்.ரவிச்சந்திரன், கடலூர் துரை.மகாதேவன், நாகப்பட்டினம் உதயராமன், கிண்டி வேணு, விழுப்புரம் மாவட்ட பொருளாளராக இருந்த உதயக்குமார் உள்ளிட்டோரும் மாற்றுக் கட்சிகளில் இருந்து வெளியேறி மீண்டும் தேமுதிகவில் இணைந்துள்ளனர்.
இதுதவிர அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலுள்ள விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் குறித்த விவரங்கள் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை வாரியாக சேகரித்து, அவர்களை மீண்டும் தேமுதிகவில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேமுதிகவுக்கு முன்பைவிட வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக, எவ்வித ஈகோவுக்கும் இடமின்றி தற்போதுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
விஜயகாந்துக்கு புத்துணர்வு…
மீண்டும் தேமுதிகவில் இணைந்த மற்றொரு நிர்வாகியான திண்டுக்கல் வி.எம்.ரவிச்சந்திரன் கூறும்போது, “15 வயது முதல் விஜயகாந்தின் ரசிகன். கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் முக்கிய நிர்வாகிகள் சிலரது நிர்பந்தத்தால் தேமுதிகவிலிருந்து விலக நேர்ந்தது. எங்களுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் தற்போது, தேமுதிகவிலிருந்து வெளியேறிவிட்டனர்.
எனவே, பழைய நிர்வாகிகள் அனைவரும், மீண்டும் தேமுதிகவுக்கு வருகின்றனர். நான், கடந்த 15-ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் மீண்டும் சேர்ந்தேன். இக்கட்டான காலகட்டத்தில் எங்களின் வருகை விஜயகாந்துக்கு புத்துணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.