

தமிழக அரசியல் சூழ் நிலையை உன்னிப் பாக கவனித்து வரு வதாக புதுச்சேரி முதல் வர் நாராயணசாமி செங் கல்பட்டில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் நடை பெற்ற பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்த வரை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிக முதல்வராக பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகின்றார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிக அளவில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சராக அறிவிக்க கோரி ஆளுநரிடம் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மனு கொடுத்துள்ளார்.
பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் தற்போது நடைபெறுவது உட்கட்சி பிரச்னை. இது குறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை புதுச்சேரி அண்டை மாநிலம். இதனால் தமிழக அரசியல் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழக பொறுப்பு ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். தமிழக அரசியலில் தலையிடுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.