

திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரபத்மனை வதம் செய்து தன்னுள் ஆட்கொண்டார் சுவாமி ஜெயந்திநாதர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, யாகசாலைக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருள, அங்கு யாக பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தங்கச் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், இரவில் தங்க ரதத்தில் கிரி வீதி உலா நடைபெற்றன.
சூரசம்ஹாரம்
முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று நடைபெற்றது. அதிகாலை முதல் யாகசாலையில் பூஜைகள் தொடங்கின. பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும், யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு தீபாராத னையும் நடந்தது.
பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மாலை 4 மணியளவில் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
ஆணவம் அழிந்தது
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் கடற் கரைக்கு புறப்பட்டார். 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை மாலை 5.07 மணிக்கு ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.27 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடன் போரிட்ட சூரபத்மனை 5.47 மணிக்கும் வதம் செய்து, தன்னுள் ஆட்கொண்டார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர் அவர்கள் எழுப்பிய ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணைப் பிளக்கச் செய்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்தார். இரவு மகாதேவர் சன்னதி முன் சுவாமி எழுந்தருள, அவருக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தோன்றிய சுவாமியின் உருவத்துக்கு அபிஷேகம் (சாயா அபிஷேகம்) நடைபெற்றது. பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.
இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணைய ஆணையர் (பொறுப்பு) ரா.ஞானசேகர், கோயில் பணியாளர்கள் செய்திருந் தனர்.