

அரசுத் துறைகளில் தனியாரை நுழைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 11-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் நாகையில் தொடங்கியது. நேற்று நடந்த 2-ம் நாள் மாநாட்டுக்கு சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 10,000 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு, அரசு மருத்துவமனைகளில் உள்ள 9 ஆய்வகங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவு உட்பட பல துறைகளில் தனியாரை உள்நுழைக்கும் அரசின் முடிவை எதிர்த்து இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊதிய விகிதங்களை வரையறுக்கும்போது தொழிற்சங்க பிரதிநிதிகளை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். இடைநிலை, உதவியாளர், தட்டச்சர், நேர்முக உதவியாளர் பணியிடங்களுக்கு வழங்கப்படும் பவானிசாகர் பயிற்சியை மேலும் அதிக நபர்களுக்கு வழங்க வேண்டும்.
மறுசீரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் ஆள்குறைப்பை கைவிட வேண்டும். மத்திய அரசின் ஊதியம் மற்றும் படி ஆகியவற்றை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.