

தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். அதனால்தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டமிடுகிறது. பாஜகவின் இந்த கனவு பகல் கனவாகவே முடியும்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு.
பெண்களை இழிவுபடுத்தி பேசிய கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. அவர் பதவி விலகும் வரை எங்களின் போராட்டம் தொடரும்'' என்று நக்மா கூறினார்.