Last Updated : 15 Nov, 2013 10:34 AM

 

Published : 15 Nov 2013 10:34 AM
Last Updated : 15 Nov 2013 10:34 AM

ஏற்காடு தேர்தல் களத்தில் குதிக்கிறது தேமுதிக

ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. மொகரம் தினம் என்பதால் வெள்ளிக்கிழமை (இன்று), வேட்புமனுக்கள் பெறப்படாது. சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது.

வரும் டிசம்பர் 4-ம் தேதியன்று ஏற்காடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் அத்தொகுதியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பெருமாள் மறைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே, தி.மு.க. வேட்பாளர் மாறன், மனுத்தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தையும் உடனே தொடங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பிரமுகர்களை அழைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதன்பிறகு, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியினர் தொடர்ந்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் துறைக்கு பல புகார்களையும் அனுப்பி வருகிறார்கள்.

இதுபோல், ஆளும்கட்சியான அ.தி.மு.க. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி சரோஜாவை தனது வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை எப்போதோ தொடங்கிவிட்டது. அனைத்து அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஆனால், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வரும் தே.மு.தி.க. தேர்தலில் போட்டியிடப்போவது பற்றி அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தனது பலத்தை அனைத்துக் கட்சிகளும் சோதித்துப் பார்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கும் நிலையில் அக்கட்சி இன்னமும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாறாக, டெல்லி தேர்தலில் போட்டியிட முடிவு செய்து 11 தொகுதிகள் தே.மு.தி.க.-வினர் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்காடு தேர்தலை புறக்கணிப்போகிறார்களா என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஏற்காடு தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்னும் (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஏற்காடு தேர்தலில் இருமுனைப்போட்டி நிலவுமா, அல்லது தனது வேட்பாளரை தே.மு.தி.க. அதிரடியாக அறிவித்து, மும்முனைப் போட்டியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அக்கட்சி, தனது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், அது பற்றி வெள்ளிக்கிழமை அறிவிக்கக்கூடும் என்றும் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேமுதிக நிர்வாகிகள், ‘தி இந்து’ நிருபரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இடைத்தேர்தலில் தே.மு.தி.க. நிச்சயம் போட்டியிடும். இதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று கருதுகிறோம். அமைதியாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தலைவர் கூறியுள்ளார். டெல்லி தேர்தல் பணிக்கு 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே அனுப்ப கட்சி முடிவு செய்துள்ளது. மற்றவர்களை அங்கு போகச் சொல்லவில்லை. அதனால், ஏற்காடு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x