

2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைக்கோள் நகரம் என்ன ஆனது? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப்பட்டி கிராமங்களில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 586.86 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என்று கடந்த 4.4.2013 அன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். அறிவிப்பு செய்து 6 மாதங்கள் ஆன பிறகு இப்போதுதான் அடிப்படை வசதிகளுக்காக முதல்கட்டமாக ரூ.120 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கர் பரப்பில் திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். அங்கு 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் என்று கடந்த 8.9.2011 அன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த 12,000 வீடுகள் எங்கே?
2 ஆண்டுக்கு முன் அறிவிப்பு
இதில் வேடிக்கை என்னவென்றால், முதல்வரின் அறிவிப்புக்கு முன்பே, 25.8.2011 அன்று சட்டசபையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் சமர்ப்பித்த கொள்கை விளக்கக்குறிப்பிலேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைக்கோள் நகரம் என்ன ஆனது? 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அடிக்கல்கூட நாட்டவில்லை? இந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு அறிவித்த மதுரை துணைக்கோள் நகரத்துக்கு இப்போது நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
எப்போது நடைமுறைக்கு வரும்?
அ.தி.மு.க. அரசின் மற்ற திட்டங்களைப் போலவே ஆமை வேகத்தில் நகரும் இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? திட்டத்தை வெளிக்கொண்டுவர ஓர் அறிக்கை. நிர்வாக ஒப்புதலுக்கு மற்றொரு அறிக்கை.
இவையெல்லாம் மக்களை ஏமாற்றம் நடவடிக்கைகளா? மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களை மறந்து அறிக்கைகள் மூலம் விளம்பரம் தேடிக் காலத்தை கழித்திடும் அதிசயம்தான் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.