காங்கிரஸ் மனம் வருந்தினால் ஆதரிப்போம்: சென்னையில் பிரச்சாரம் தொடங்கி கருணாநிதி பேச்சு

காங்கிரஸ் மனம் வருந்தினால் ஆதரிப்போம்: சென்னையில் பிரச்சாரம் தொடங்கி கருணாநிதி பேச்சு
Updated on
2 min read

நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக மன்னிக்காது. காங்கிரஸார் மனம் வருந்தி வருவார்களேயானால், அவர்களை திமுக ஆதரிக்கும் என்று சென்னையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி, தனது தேர்தல் பிரச்சா ரத்தை சென்னையில் புதன் கிழமை தொடங்கினார். சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த பொதுக்கூட் டத்தில் சென்னையின் 3 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து கருணாநிதி பேசியதாவது: சாதி, மத பேதமற்ற, மதவெறியற்ற அமைதியை விரும்பும் கூட்டமாக இந்த இயக்கம் இருக்கும். நாம் தற்போது பல்வேறு சோதனை படிகளை, காட்டாறுகளை கடந்து சென்று சாதனை புரிய வேண்டும். அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சியை நடத்துபவர், அவரது பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, அண்ணா பெயரில் உருவாக்கப்பட்டதை எல்லாம் மாற்றி வருகிறார்.

சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தேன். அதற்காக, வரும் ஆண்டில் சுதந்திர தினத்தன்று ஜெயலலிதா தேசியக் கொடியேற்றாமல் இருப்பாரா? அதுவரை அவரது ஆட்சி இருக்குமா என்று தெரியவில்லை. நாங்கள் போட்ட சாலையில், பாலத்தில்தான் அவர் தினமும் போயஸ் கார்டனிலிருந்து கோட்டைக்கு செல்கிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த விவரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பட்டியலிட்டுள்ளார். (ஜெயலலி தாவின் சொத்துப் பட்டியலை வாசித்தார்). ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறியவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. ஆனால் அவர் எங்களைப் பார்த்து ஊழல் என்கிறார்.

பல சைபர்களைப் போட்டு, ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள். இப்போது ஒவ்வொரு சைபராக விலகுகிறது. காங்கிரஸார் திமுகவை பழிவாங்கும் வகையில் நடந்து கொண்டனர். யாரைப் பழிவாங் கலாம் என்றுதான் அலைந்தார்கள். நன்றியை மறந்து விட்டு, நன்றி என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டனர். அதனால்தான் இன்றைக்கு தமிழகத்திலும் சரி, வேறு மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கட்சி அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்த உலகத்தில் நல்ல முறையில் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் நன்றி உணர்வு இருக்க வேண்டும். நன்றி உணர்வு இல்லாமல், கடந்த காலத்தில் நமக்கு கைதூக்கி விட்டவர்கள் யார் என்று எண்ணிப் பார்க்காமல், திமுக தோழர்களை, செயல்வீரர்களை நோக்கி காங்கிரஸார் நடவடிக்கை எடுத்ததால் இப்போது அனுபவிக் கிறார்கள்.

அப்படி அனுபவித்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையுடன் ஒன்று சொல்கிறேன். இதே காங்கிரஸார் நாளைக்கு மனம் வருந்தி, நாங்கள் மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், மதவெறி கொண்டவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால், போனால் போகட்டும் என்று அவர்களை திமுக ஆதரிக்கும். அவர்கள் செய்த தீமைகளை பொறுத்துக் கொண்டு, இதுவரை செய்ததை எண்ணிப்பாராமல், அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையில் திமுக நடக்கும்.

அதே நேரத்தில் நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும், மனைவி யாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் அவர்களை திமுக மன்னிக்காது. அவர்களுடைய தவறுகளை மறவாது. எனக்கு கொள்கைதான் முக்கியம். குழந்தை குட்டிகளல்ல.

நான் பொதுவாழ்வுக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேனோ.. அதற்குள் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டியவைகளை செய்து விட்டுத்தான் கண் மூடுவேன். அதுவரை பெரியார், அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பேணி நடக்க, இந்த இயக்கத்தின் வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார். நிகழ்ச்சியில் வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஏராளமானோர் பங்கேற் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in