ஆடிட்டர் ரமேஷை கொன்றது பக்ருதீனும் கூட்டாளிகளும்தான்

ஆடிட்டர் ரமேஷை கொன்றது பக்ருதீனும் கூட்டாளிகளும்தான்
Updated on
1 min read

"போலீஸ்" பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூன்று பேரும்தான் ஆடிட்டர் ரமேஷை வெட்டிக் கொன்றனர் என்று நேரில் பார்த்த காவலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜுலை மாதம் 19ம் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப் பட்டார். அப்போது ரமேஷின் அலுவலக காவலாளி ஜெயராமன் (வயது 73) கொலையை நேரில் பார்த்து இருக்கிறார். இந்த வழக்கின் ஒரே சாட்சி அவர்தான். அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. சேலத்தில் இருந்து காவலாளி ஜெயராமனை பலத்த பாதுகாப்பு டன் காவல்துறையினர் வேலூருக்கு அழைத்து வந்தனர். போலீஸ் காவலில் இருக்கும் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரைம், குண்டு காயத்துடன் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பன்னா இஸ்மாயிலையும் நேரில் காண்பித்து அடையாளம் காட்டச் சொன்னார்கள்.

அப்போது ஆடிட்டர் ரமேஷைக் கொலை செய்தது இவர்கள்தான் என்று ஜெயராமன் கூறியுள்ளார். இதை எழுத்து மூலமாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சாட்சி விசாரணையை மிகவும் ரகசியமாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். காவலாளி ஜெயராமனுக்கும், அவரது குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பு கொடுத்து காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்து அமைப்பு, நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு

10 ஆண்டுகளாக தேடப்பட்ட தீவிரவாதிகள் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத் தில் இந்து அமைப்புகளுக்கும், சில தலைவர்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உடன் செல்கிறார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூரில் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மற்றும் மோகன் ராஜூலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலருக்கு துப்பாக்கி இல்லாத காவலர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in