

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்று கூறி போலி ஆவணம் தயாரித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஈரோடு இளைஞரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
மறைந்த நடிகர் சோபன் பாபு ஜெய லலிதாவின் மகனாக 1985-ல் பிறந்தேன். பின்னர் எம்ஜிஆர் முன்னிலையில் வசந்தாமணி என்பவருக்கு என்னை தத்து கொடுத்துவிட்டனர். அதற்கான பத்திர ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஜெயலலிதா இருந்தபோது, அவரை பல முறை சந்தித்துப் பேசியுள்ளேன். 2017 மார்ச்சில் வெளியுலகுக்கு என்னை அறி முகப்படுத்துவதாக கூறினார். அதற்குள் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க விடாமல் என்னை ஒரு பங் களாவில் அடைத்து வைத்து துன்புறுத் தினர். சசிகலா தரப்பினரால் எனக்கும், என் வளர்ப்பு பெற்றோருக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு போலீஸ் பாது காப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். சில ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
இது விசாரணைக்கு உகந்ததுதானா என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த மார்ச் 17-ம் தேதி பரிசீலனை செய்தார். மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தியையும், அவருடன் உதவியாக வந்த சமூக ஆர் வலர் டிராபிக் ராமசாமியையும் அப் போதே எச்சரித்த நீதிபதி, ‘இது பொய் எனத் தெரிந்தால் விளைவு கடுமையாக இருக்கும். உங்களைக் கைது செய்ய நானே உத்தரவிடுவேன்’ என்றார். ஆவ ணங்களை சென்னை காவல் ஆணையர் பரிசீலிக்க உத்தரவிட்டார்.
நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக் கல் செய்தனர். அதில், ‘‘ஈரோட்டை சேர்ந்த வசந்தாமணியின் சொந்த மகன்தான் மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் முன்தேதியிட்ட பத்திரத்தை வாங்கி, ஜெயலலிதாவின் மகன் என்பதுபோல தத்து கொடுப்பு ஆவணங்களை போலியாக தயாரித்துள் ளார். இவருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதைப் படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்துடன் விளையாடிய தோடு, முன்னாள் முதல்வரின் மகன் எனக்கூறி போலி ஆவணம் தயாரித்து திட்டமிட்டு குற்ற மோசடியிலும் கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீஸார் கிருஷ்ணமூர்த்தி மீது 465 (போலி ஆவ ணம் தயாரித்தல்), 468 (ஏமாற்றும் நோக் கத்தில் போலி ஆவணம் தயாரித்தல்), 193 (பொய் சாட்சி தயாரித்தல்), 419 (ஆள் மாறாட்டம்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த் தியை நேற்று கைது செய்தனர்.