

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு அடியில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு மாநில அரசு விதித்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு அடியில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியை மத்திய அரசு நிறுவனமான ‘கெயில்’ மேற்கொண்டது.
இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் குரல் எழுப்பினர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதையடுத்து, 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. அதன் முடிவில், கெயில் நிறுவனத்தின் பணிகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்புக்கு விவசாயிகளும் மார்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலுவும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இது தொடர்பாக தகவல்கள் வெளிவரும்” என்றார்.