பிரதமருடன் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

பிரதமருடன் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
Updated on
2 min read

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) 50 ஆயிரம் மாணவர்கள் மெரினாவில் திரண்டனர். இதனால் கடற்கரை சாலை மட்டுமல்லாது சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர், நேற்றிரவு டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியை நாளை (இன்று) சந்திக்கிறேன். அப்போது, ஜல்லிக் கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்துவேன்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை (வியாழக்கிழமை) 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி வலியுறுத்தியதாகவும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.

தொடரும் போராட்டம்:

இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் அதி தீவிரமடைந்துள்ளது. சென்னை மெரினாவில் 3-வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் இன்று பல இடங்களிலும் போராட்டம் வலுத்துள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர நகர் முழுவதும் ஆங்காங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் அறவழியில் தொடர்ந்து போராட வேண்டும் என போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்ப இளைஞர்களும், பொதுமக்களும் அமைதியாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை நாராயணபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் | படம்: ஒய்.ஆண்டனி செல்வராஜ்.

மதுரை எல்லீஸ் நகரில் இளைஞர்கள் சிலர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூரில் 4-வது நாள்:

அலங்காநல்லூரில் 4-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள், ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் வரத்தேவையில்லை என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அறவழியில், அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டக்காரர்களுக்கு ஊர்மக்களே உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். அலங்காநல்லூரில் காளைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு காளைக்கு 4 போலீஸ் என்ற வீதத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in