வீனஸ் காலனிக்கு குடிபெயர்கிறார் ஓபிஎஸ்

வீனஸ் காலனிக்கு குடிபெயர்கிறார் ஓபிஎஸ்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வீனஸ் காலனிக்கு குடிபெயர்கிறார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இரண்டு மாதங்கள் சென்ற நிலையில், பிப்ரவரி 5-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 7-ம் தேதி சசிகலாவின் தலைமையை எதிர்த்து தனி அணியை உருவாக்கி செயல்படத் தொடங்கினார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சராக இருந்தபோதும், முதல்வராக 3 முறை இருந்த போதும், ராஜா அண்ணாமலை புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அமைச்சர், முதல்வர் பதவிகளை இழந்து சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அரசு சார்பில், ஓ.பன் னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தை காலி செய்யும்படி, பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியிருந்தது. வீட்டை காலி செய்ய ஆறு மாத கால அவகாசம் உள்ள நிலையில், அவர் வேறு வீட்டைத் தேடிவந்தார்.

இந்நிலையில், வீனஸ் காலனி பகுதியில், இயக்குநர் மணிரத்னம் வீடு அருகில் ஒரு வீட்டைப் பார்த்து அவரும், அவரது குடும்பத்தினரும் இறுதி செய்துள்ளனர். இதையடுத்து, ஓபிஎஸ் தற்போது குடியிருக்கும் தென்பெண்ணை இல்லத்தில் போடப்பட்டிருந்த ஷாமியானா, சேர் உள்ளிட்ட பொருட்கள் காலி செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில தினங்களில் அவர் வீடு மாறுவார் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in