Published : 20 Jun 2017 02:16 PM
Last Updated : 20 Jun 2017 02:16 PM

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே மாட்டிறைச்சி விவகாரத்தில் நிலைப்பாடு: பேரவையில் முதல்வர் தகவல்

மாட்டிறைச்சி குறித்த மத்திய அரசின் சட்டம் குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தான் நிலைப்பாடு எடுக்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வரின் உரை:

“தமிழ்நாட்டில் பசு வதை தடுப்பு கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம்,கடந்த 23.5.2017 அன்று,1960 ஆம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ், கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள்,2017 வெளியிடப்பட்டது. இந்த விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

இவ்விதிகளின் 22(b)(ii), 22(ன)(ii) மற்றும் 22(ந) பிரிவுகளின் படி, சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளின் பிரிவு 22(ன)(iஎ) ன்படி, மாடுகளை வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின் 8வது பிரிவின் படி மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விதிகளின் பிரிவு 22(ந)(iii)ன்படி, மாட்டினைக் கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விதிகளை செயல்படுத்தத் தடை ஆணை கோரி, சென்னை உயர ்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் கடந்த 23.5.2017 அன்று மனுக்கள் (10128/2017 மற்றும் 10127/2017) தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற அமர்வு, இவ்விதிகள் செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு வரும் 11.7.2017 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்ததை கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. தீர்ப்பிற்குப்பின் உரிய நிலைப்பாட்டினை இவ்வரசு எடுக்கும் எனவும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு செயல்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

நான் ஏற்கனவே, விளக்கமாக குறிப்பிட்டுள்ளதை போன்று இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து வழக்கு நடைபெற்று கொண்டியிருக்கிறது. வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்திலும், உயர ்நீதிமன்றத்திலும் என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அதை அரசு நடைமுறை படுத்தும் என்பதை தெளிவாக இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x