தொகுதியில் வாக்காளர்களை கவர திமுக திண்ணை பிரச்சாரம்

தொகுதியில் வாக்காளர்களை கவர திமுக திண்ணை பிரச்சாரம்
Updated on
1 min read

வாக்காளர்களை கவர திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என ஆர்.கே.நகரில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் குறித்து 43-வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. செல்வகணபதி, சேகர்பாபு எம்எல்ஏ, தொகுதி பொறுப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. இதனால், பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் தற்போது திமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. திட்டமிட்டு பணிபுரிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே, பெண்களிடம் மிகுந்த அக்கறையோடு பேச வேண்டும். திண்ணைப் பிரச்சாரம் செய்வதால் நேருக்கு நேராக மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதன்மூலமே மக்களை கவர முடியும் என கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பகுதியிலும் 5 குழுக்களாக பிரிந்து நாள்தோறும் குறைந்தபட்சம் 10 முறையாவது ஒரு வாக்காளரை சந்திக்க வேண்டும். தற்போது 20 சதவீத வாக்குகள் திமுகவுக்கு உள்ளது. நடுநிலை வாக்காளர்களிடம் பேசி திமுக வாக்கு வங்கியை 40 சதவீதமாக உயர்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொருக்குப்பேட்டை நாகாத்தம்மன் கோயில், ஆரணி ரங்கம் தெரு, திருநாவுக்கரசு தோட்டம், பெருமாள் கோயில் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in