வங்கக் கடலில் 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு: ஆகஸ்ட் 31 வரை பரவலாக மழை இருக்கும்

வங்கக் கடலில் 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு: ஆகஸ்ட் 31 வரை பரவலாக மழை இருக்கும்
Updated on
2 min read

மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதி களில் அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும், படிப்படியாக மழையளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பரவலாக மழையும் பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

இன்று மிதமான மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக விழுப்புரம் மாவட்டம் வானூரில் 60 மி.மீ., புதுச்சேரியில் 50 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்த நிலை, அடுத்து வரும் 3 தினங்களுக்கு நீடிக்கும்.

மழையளவு 7 சதவீதம் குறைவு

தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை தமிழகத்தில் கடந்த 1-ம் தேதியில் இருந்து இன்றுவரை 170 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 183 மில்லி மீட்டர். இயல்பில் இருந்து 7 சதவீதம் மழை குறைவாகப் பெய்திருக்கிறது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

இம்மாதம் அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தியதன் காரணம் பற்றியும், அடுத்து வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையால் ஜூலை மாதம் வெப்ப அளவு குறைவாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் குறை வான மழை, வானம் தெளிவாக இருந்தது, சூரிய ஒளி நேரடியாக விழுந்தது ஆகிய காரணங்களால் வெயில் சுட்டெரித்தது. சென்னையைப் பொறுத்தவரை கடல் காற்று வீசுவதைப் பொறுத்து வெப்பநிலை மாறுபடும். கடல் காற்று முற்பகல் 11.30 மணி அல்லது பிற்பகல் 1.30 மணி அல்லது இடைப்பட்ட நேரத்தில் வீசத் தொடங்கலாம்.

11.30 மணிக்கு கடல்காற்று வீசத் தொடங்கினால் வெப்ப நிலை 35 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே பிற்பகல் 1.30 மணிக்கு கடல்காற்று வீசத் தொடங்கினால் அப்போது வெப்பம் மேலும் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் கடல்காற்று தாமத மாக வீசியதால் நுங்கம்பாக் கத்தில் 37.9 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதி வானது.

காற்றழுத்த தாழ்வு நிலை

மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியையொட்டி அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் மழை பெய்யவும், படிப்படியாக மழையளவு அதிகரித்து, இம்மாத இறுதிவரை மழை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், தென் தமிழகத்தில் ஓரளவே மழை பெய்யும் என்றார் ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in