பாஜக அணியில் இருந்து மதிமுக, பாமக வெளியேறுமா?- ராமதாஸ் இல்ல நிகழ்ச்சியில் ‘பிள்ளையார்சுழி’ சந்திப்பு

பாஜக அணியில் இருந்து மதிமுக, பாமக வெளியேறுமா?- ராமதாஸ் இல்ல நிகழ்ச்சியில் ‘பிள்ளையார்சுழி’ சந்திப்பு
Updated on
2 min read

பாஜக மீது அதிருப்தியில் இருக் கும் பாமக, மதிமுகவை அந்தக் கூட்டணியில் இருந்து பிரித்து தங்கள் பக்கம் கொண்டுவர திமுக தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள ராமதாஸ் இல்லத் திருமண நிகழ்ச்சியில் இதற்கான ‘பிள்ளையார் சுழி’ சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள் ளிட்ட கட்சிகள் இணைந்தன. இதில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும், பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டும் வெற்றி பெற்றனர். மதிமுக, தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி ஆட்சிதான் அமைப்போம் என்று தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டது. இதனால், அன்புமணிக்கு அமைச் சரவையில் இடம் கிடைக்கும் என்றும், மதிமுகவில் வைகோவுக் கும், தேமுதிகவில் சுதீஷுக்கும் ராஜ்யசபை உறுப்பி னர் பதவி கிடைக்கும் என்றும் எதிர் பார்த்தனர். ஆனால், மத்தியில் ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எந்த வாக்குறுதியையும் பாஜக நிறை வேற்றவில்லை.

மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌சவை அழைத்தது, பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம், கட்டாய இந்தித் திணிப்பு மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது, இலங்கை அரசுக்கு ஆதரவான நடவடிக்கை போன்ற வற்றால் பாஜக மீது பாமக, மதிமுக கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. ராமதாஸும் வைகோவும் வெளிப்படையாகவே மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ராஜபக்‌சவுக்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பேசியது இவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தால், எதிர்காலத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோபத்தில் இருக்கும் வைகோவையும், அதிருப்தியில் இருக்கும் ராமதாஸையும் பாஜக கூட்டணியில் இருந்து பிரித்து தங்கள் அணிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டதாக, அந்தக் கட்சியின் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கடந்த செப்டம்பரில் பூந்தமல்லி யில் நடந்த மதிமுக மாநாட்டில் பேசிய வைகோ, அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக வெளிப்படை யாக பாராட்டினார். பாஜகவை பொறுத்தவரை ஈழத் தமிழர் விவகாரம், அரசியல் ரீதியான பதவிகள், திராவிட கலாச்சாரத்துக்கு பொருந்தாத நடவடிக்கைகள் போன்ற விவகாரங் களில் கூட்டணி தர்மத்தை கொஞ் சமும் கடைபிடிக்கவில்லை. அதனால் மதிமுகவும், பாமகவும் அதிருப்தியில் உள்ளன. அதே நேரம், அவர்களை வரும் தேர்தலில் உரிய கவுரவத்துடன் அரவணைத்துச் செல்ல திமுக தயாராகிவிட்டது. அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இதன் முதல்கட்டமாக, மாமல்ல புரத்தில் 29, 30-ம் தேதிகளில் நடக்கவுள்ள டாக்டர் ராமதாஸின் பேரன், பேத்தி திருமண விழாவில் முக்கிய சந்திப்புகள் நடக்க வுள்ளன.

திருமண நிகழ்ச்சிக்கு வரும் கருணாநிதி, ஸ்டாலின், வைகோ மற்றும் ராமதாஸ் ஆகியோர் ஒரே இடத்தில் சந்திக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சந்திப்பு புதிய கூட்டணிக்கு அச்சாரமாக அமையக் கூடும். அதன்பிறகு கூட்டணி பேச்சுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in