

''இவன் மிகவும் அமைதியானவன்; ஆனால் தொந்தரவு செய்தால் சுயரூபத்தைக் காட்டுவான் எஜமானரைப் போலவே!'' இப்படித்தான் ராமய்யாவை அறிமுகப்படுத்துகிறார்கள். நன்கு வளர்க்கப்பட்டு திமிறிக்கொண்டிருக்கிறான் காங்கேயம் காளையான ராமய்யா.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் வசிக்கிறான் ராமய்யா. ஓபிஎஸ்ஸின் அதிரடி மெரினா பேட்டிக்குப் பிறகு கட்சித் தொண்டர்களும், கேமராக்களுடன் கூடிய பத்திரிகையாளர்களும் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே அவரின் வீட்டில் குவியத் தொடங்கினர். ஆனால் அங்கிருந்த ராமையா தன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
ராமய்யா குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அதை வளர்க்கும் சிங்கம்புணரியைச் சேர்ந்த செந்தில்குமார். ''ராமய்யாவை சுமார் 5 வருடங்களுக்கு முன்னால் ஐயா (ஓபிஎஸ்) இங்கு கொண்டு வந்தார். ராமய்யா என்றால் அவருக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு நாளும் வெளியே கிளம்புவதற்கு முன்னால் இங்கு வந்து, ராமய்யாவைப் பார்த்துவிட்டுத்தான் செல்வார். அதேபோல மற்ற விலங்குகளையும் காண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்'' என்கிறார் செந்தில்குமார்.
விலங்குகளின் ஒவ்வொரு சைகையையும் புரிந்துகொள்ளும் குமார், ஒரு நண்பனுடன் பேசுவது போலக் காளையுடன் பேசுகிறார். மற்றவர்களால் ராமய்யாவின் செய்கைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று கூறுபவர், காளைக்கு வெகு அருகில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்.
மாட்டுக்கொட்டகை, முதல்வரின் அலுவலகக் கார் நிறுத்தப்படுவதற்கு சில அடிகள் தள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே ராமய்யாவோடு ஐந்து பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.
கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த ராமய்யா மிகுந்த அமைதி காத்தாலும், முதல்வர் வீட்டில் இரண்டு நாய்களும் புதிய விருந்தாளிகளை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. சிம்பா, ராஜா என பெயரிடப்பட்டிருக்கும் அந்நாய்கள் தங்களின் கொட்டிலில் துறுதுறுவென விளையாடிக்கொண்டிருந்தன.
இதுகுறித்து மேலும் பேசும் செந்தில்குமார், ''முதலமைச்சர் ஓபிஎஸ் டெல்லிக்குச் சென்று, பிரதமர் மோடியைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றினாலும், ராமய்யா ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படவில்லை. ஐயா ராமய்யாவை அதிகம் நேசிக்கிறார்'' என்கிறார்.
தமிழில்: ரமணி பிரபா தேவி