Published : 04 Jan 2016 10:36 AM
Last Updated : 04 Jan 2016 10:36 AM

நீர்நிலை ஆக்கிரமிப்புகளே பெருவெள்ளத்துக்கு காரணம்- உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

சுற்றுச்சூழலையும் நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் “யாதும் ஊரே...” என்ற திட்டத்தை நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவை ஒட்டி “சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு” என்ற 2 நாள் கருத்தரங்கம் சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி நூற்றாண்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

யாதும் ஊரே நிறைவுவிழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவந்தனர். நீர் ஆதாரங்களாக இருந்த ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை ஆகியவற்றை விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். தனது சொந்தப்பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்கை மக்கள் தெய்வம் போல் போற்றுகிறார்கள். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து பணிநிமித்தமாக இங்கு வந்த அவர் இங்கே அணை கட்டினார்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம். இப்போது நீர் செல்லும் இடங்களில் எல்லாம் கல்விச்சாலைகள் நிற்கின்றன. ஏரி நிறைந்த மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு இப்போது பொறியியல் கல்லூரிகள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இருக்க வேண்டிய இடத்தில் அந்த கல்லூரிகள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், நீர் வரும் பாதையில், ஆறுகள், ஏரிகள் இருந்த பகுதிகளில்தான் பெரும்பாலான கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் நமக்கு போதித்தது என்னவென்றால் வெள்ளம் தானாக நம் வீட்டுக்கு வந்துவிடவில்லை. வெள்ளத்தின் வீட்டில் நாம் போய் இருந்துவிட்டோம். அதனால் வந்ததுதான் இந்த வினை. சுயநலம் மிக்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையின் காரணமாகவே இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் என்றால் நீர் வரும் பாதை, நீர் தங்கும் பாதை, புறம்போக்கு இடம் இவற்றை பட்டா போட்டு அவர்கள் கட்டிடங்களை கட்டிவிடுகிறார்கள். ஒன்றுமறியாத அப்பாவிகள் வீடுகளை வாங்கிவிட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. எங்கே தவறுகள் நடக்கிறதோ அங்கே மக்கள் சக்தி மூலம் தட்டிக்கேட்டு தவறுகளை திருத்த வேண்டும். அதன் ஆரம்பம்தான் யாதும் ஊரே நிகழ்ச்சி.

மதம், இனம், மொழி என பேதமில்லாமல் அனைவரும் சமம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது இந்த பெருவெள்ளம். நாம் அனைவரும் மனித சாதி என்பதை நமக்கு நாமே உணர்த்தியுள்ளது இந்த மழைவெள்ளம். ‘பாதிக்கப்பட்ட மக்களை விட சேவை செய்பவர்கள் அதிகம் இருப்பதை, நான் இங்கு பார்த்தேன்’ என்று வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ராணுவ வீரர் கூறியிருக்கிறார். இப்படி பொங்கி எழுந்த மக்கள் ஆர்வத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த ஆர்வத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி அடிகோலும்.

இந்த வெள்ளம் நமக்கு பல படிப்பினைகளை சொல்லியிருக்கிறது. திட்டமிடாததால்தான் நம்மால் இந்த வெள்ளத்தை எதிர்கொள்ள முடியவில்லை. நாம் இயற்கையை எதிர்த்துப் போராடுகிறோம். இயற்கையை எதிர்த்தால் வெள்ளம் போன்ற நிகழ்வுகள்தான் ஏற்படும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால்தான் இந்த இடர்பாடு. நம் முன்னோர்களைப் போல இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் அது நமக்கு உதவுமே ஒழிய இன்னல்களை ஏற்படுத்தாது என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x