Published : 28 May 2017 11:18 AM
Last Updated : 28 May 2017 11:18 AM

அதிக வரி விதிப்பு தொழில் துறையை நிலைகுலையச் செய்யும்: ஜி.எஸ்.டி. ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சரிடம் முறையீடு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பில் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவது தொழில் துறையை நிலைகுலையச் செய்யும் என்று பல்வேறு தொழில் துறையினரும் அமைச்சரிடம் முறையிட்டனர்.

கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப் படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். ஆட்சியர் த.ந.ஹரிஹரன், வணிக வரித் துறை இணை ஆணையர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், எம்.பி. ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் மற்றும் அலுவலர்கள், வணிக, தொழில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

இதில், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.சுந்தரம் பேசும்போது, ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வெட் கிரைண்டர்கள், கம்ப்ரசர்கள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு 28 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய பம்ப் செட்டுகளுக்கு 12 சதவீதம் வரி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. பொதுவாகவே, தென்னிந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான வரி அதிக அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். பெரு நிறுவனங்களுக்கு இணையாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பது, எந்த வகையில் நியாயமானது’ என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “ஏறத்தாழ 80 சதவீத அளவுக்கு ஜாப் ஆர்டர்களை நம்பியுள்ள குறுந் தொழில்முனைவோருக்கு 18 சதவீத வரி விதிப்பது, தொழில் நெருக்கடியை உண்டாக்கும். ஜி.எஸ்.டி. வரி விலக்கு உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். வரி விதிப்பு, மாத ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொழில் முனைவோர் புரிந்துகொள்ள ஓராண்டு காலஅவகாசம் வழங்கி, அதுவரை நடைமுறையில் ஏற்படும் சிறு தவறுகளுக்கு அபராதம் விதிப்பதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்” என்றார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ் பேசும்போது, “பம்ப்செட்டின் மூலப் பொருளான காஸ்டிங் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு 18 சதவீதம், மோட்டார்களின் மூலப் பொருட்களுக்கு 28 சதவீத வரி நிர்ணயித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பம்ப்செட்டுகளுக்கு விற்பனை வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கொள்முதல் மற்றும் விற்பனை வரியை சீரானமுறையில் 12 சதவீதம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். தற்போதுள்ள வணிக வரித் துறை பதிவு எண்ணை, ஜி.எஸ்.டி. எண்ணாக மாற்றி பதிவு செய்ய வேண்டும். உணவு உற்பத்திக்கு உதவும் விவசாய பம்ப்செட்டுகளுக்கு 5 சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் வனிதா மோகன், வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், சிட்கோ தொழிற்பேட்டை சங்கத் தலைவர் லோகநாதன், தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம் மற்றும் பல்வேறு தொழில், வணிக அமைப்புகளைச் சேர்ந்தோரும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிக அளவில் உள்ளதால் தொழில் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், எனவே வரி விதிப்பைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும்படி வணிக வரித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பாக தொழில், வணிக அமைப்புகளைச் சேர்ந்தோர் தெரிவித்துள்ள கருத்துகளை, மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவிப்போம். மேலும், ஜூன் 2-ம் தேதி தொழில், வணிக நிறுவனத்தினர், தமிழக முதல்வரை சந்தித்து, தங்களது கருத்துகளைக் கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x