Published : 26 Mar 2014 10:55 AM
Last Updated : 26 Mar 2014 10:55 AM

இலக்கிய திறனாய்வாளர் தி.க.சி. மறைவுக்கு வைகோ இரங்கல்

சாகித்ய அகடமி விருது பெற்ற முதுபெரும் இலக்கிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று திருநெல்வேலியில் காலமானார்.

அவரது மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ரசிகமணி டி.கே.சி.யை தந்த நெல்லை மாவட்டம்தான், இலக்கியச் சுடரொளி தி.க.சி.யையும் தந்தது. திருநெல்வேலி கணபதியப்பன் -சிவசங்கரன் 1925 மார்ச் 30 இல் பிறந்தார். 90 ஆவது வயதின் வாசலில் மறைந்தார்.

பாரதி, பாரதிதாசன், ஜீவா, வ.ரா. ஆகியோரால் செதுக்கப்பட்டவர். புதுமைப்பித்தன், கோ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன் ஆகிய எழுத்தாளர்கள் தி.க.சி.யின் உற்ற நண்பர்கள்.

2001 மார்ச் 18 ஆம் தேதி, வெளியான தினமணி கதிரில் தி.க.சி. தந்த பேட்டியில் பின்வருமாறு கூறினார், “தி.க.சி. என்ற மனிதன் இறந்துவிட்டால், ஒரு எழுத்தாளன் என்று கூட வேண்டாம் ஒரு நல்ல மனிதன், உற்ற தோழன் போய்விட்டான் என்று நினைத்து கண்ணீர் விட ஒரு நூறு பேராவது வேண்டும். நான் ஒரு எளிய தோட்டக்காரன். எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன். மலர்கின்ற செடி மலரட்டும், எந்தச் செடியும் கருக என் மனம் இடம் தராது.” இந்த உயிர்த்துடிப்பான வரிகளில் தி.க.சி. என்ற மனிதாபிமானி ஒளிர்கிறார்.

1945 இல் நெல்லையில் ஒரு வங்கியில் காசாளராக பணியில் சேர்ந்தார். 1948 இல் சென்னைக்கு மாற்றப்பட்டார். பொதுவுடமை இயக்கத் தொடர்புகள் ஏற்பட்டன. 1964 இல் வேலையை ராஜினாமா செய்தார். 1965 முதல் 1990 வரை சோவியத் நாடு இதழில் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தார். 1965 தாமரை இதழுக்கு பொறுப்பாசிரியராகவும் இருந்தார். பல இலக்கிய விமர்சன நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் வழங்கிய படைப்பாளி. பொதுஉடைமைக் கொள்கையை ஏற்றபோதிலும் காரல் மார்க்Þ, லெனின் சிந்தனை வழியில் தமிழ் ஈழ விடுதலைக்கு தன் எழுத்தையும், பேச்சையும் அர்ப்பணித்தவராகவே வாழ்ந்தார்.

மாவீர மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்தியால் நெஞ்சம் நெருப்பாகி, கல்லூரி மாணவர்களின் போராட்டக் களங்களுக்கெல்லாம் சென்று உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.

என் மீது எல்லையற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார். கடந்த மூன்று மாத காலமாக தன்னைச் சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் வைகோ நாடாளுமன்றத்துக்கு இம்முறை வெற்றி பெற்றுச் செல்ல வேண்டும் என்றே கூறி வந்தார்.

எனக்கு அறிவுரையும் ஆறுதலும் வழங்கி வந்த ஒரு மூத்த அறிஞரை இழந்துவிட்டேன். இலக்கிய வானில் பிரகாசித்த ஒளிச்சுடர் அணைந்துவிட்டது. ஆனால், அவர் படைத்த நூல்களும், அவரது புகழும் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும்.

அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் றவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x