

கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ.340.53 கோடி மதிப்பில் உயர்நிலைப் பாலம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆட்டோமொபைல், ஜவுளித் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் மேம்பாட்டுக்காக 10 ஆயிரம் சூரிய சக்தியுடன் கூடிய வீடுகள், மின் மோட்டார் பொருத்தப்பட்ட 6 ஆயிரம் பெடல் தறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், நெசவாளர்களுக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் ஒற்றைச் சாளர அடிப்படையில் தொழில் அனுமதிகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக வனப் பகுதிகளில் தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர்க் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் பேருந்து நிலையம் அருகில் ரூ.43 கோடி மதிப்பில் நடைபெறும் மேம்பாலப் பணி வரும் நவம்பர் மாதத்தில் நிறைவடையும்.
மாயையில் எதிர்க்கட்சிகள்
தமிழ், தமிழர் என்று கூறியவர்கள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்களால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பல தொல்லைகள்தான் விளைந்தன. வாக்குறுதிகளை மறந்துவிட்டு, தங்களது குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபட்டார்கள். ஆனால், அதிமுக அரசு தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது மக்கள் விரோத செயலாகும்.
ஆளுங்கட்சி மீது அவதூறு பேசுவதுதான் பணி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் இல்லை என்றால் நாடே இயங்காது என்ற மாயையில் உள்ளனர்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 71 ஏரிகள், 358 குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
காந்திபுரம் மேம்பாலம்
கோவை காந்திபுரத்தில் ரூ.162 கோடி மதிப்பில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் முதல் அடுக்குப் பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவடைந்து, போக்குவத்துக்குக்கு திறந்துவிடப்படும். இரண்டாம் அடுக்கு பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையும்.
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில், நில எடுப்பு பணிக்காக ரூ.88.61 கோடி, மேம்பாலம் கட்டுமானத்துக்காக ரூ.121.82 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ.340.53 கோடி மதிப்பில் உயர்நிலைப் பாலம் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டவுடன், பணிகள் தொடங்கும். மேலும், ரூ.320 கோடியில் மேற்குவட்டச் சாலை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் மலர்கள் தூவினர்.
போராட்டக் குழுவினர் சந்திப்பு
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் முதல்வரை சந்தித்து, இந்த திட்டத்துக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கியமைக்காக நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.