

சரக்குப் பெட்டக முனையங்கள் தேசிய கூட்டமைப்பின் 20-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் ஜோஷி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காம ராஜர் துறைமுகத்தின் தலைவர் பாஸ்கராச்சார், சென்னை சுங்கத்துறை ஆணையர் (ஏற்றுமதி) மாயங்க்குமார், சென்னை துறைமுக துணைத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஸ்கராச் சார், ‘‘எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,270 கோடி செலவில் சரக்குப் பெட்டக முனையம் விரைவில் அமைக்கப் படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் அமைக்கப்பட உள்ள இந்த முனையத்தில் 1.2 மில்லியன் கன்டெய்னர்களை கையாள முடியும். மத்திய அரசின் சாகர்மாலா திட்டப்படி ஏற்றுமதி, இறக்குமதி இத்துறைமுகத்தில் எளிதாக்கப்படும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் விழா மலர் வெளியிடப்பட்டது. உபேந்திரா நன்றி தெரிவித்தார். பின்னர் நடந்த கருத்தரங்கில் சரக்குப் பெட்டகத் துறை வல்லுநர்கள் பங்கேற்று, சங்க உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.