சென்னை: மாணவர்களுக்கு எமனாகும் படிக்கட்டு பயணம்

சென்னை: மாணவர்களுக்கு எமனாகும் படிக்கட்டு பயணம்
Updated on
1 min read

சென்னை மாநகர பஸ்களின் படிகள் பள்ளி சிறுவர்களுக்கு எமனாகவே மாறி வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள், குறிப்பாக அரசு கல்வி நிறுவன மாணவர்கள், அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். மாணவர்கள் காலை 9 மணிக்குள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பல வழித்தடங்களில் பஸ்கள் குறைவாகவே இருப்பதால் படிக்கட்டில் தொங்கியபடி மாண வர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

2012 டிசம்பரில் சென்னை கந்தன்சாவடியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் லாரி மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஆய்வு நடத்தி 60 வழித்தடங்களில் 100 பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி 200 பஸ்களாக உயர்த்தப்பட்டது.

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி முதல் சிறப்பு பஸ் திட்டத்தை அமல்படுத்தியது. கேளம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகமாக உள்ள பகுதிகளிலும் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த பஸ்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் படிப்படியாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகப் பெற்றோரும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்துத் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பால்பர்ணபாஸ் கூறுகையில், ‘‘அரசு அறிவித்தபடி, மாநகரப் போக்குவரத்துக் கழகம் முழுமையாகச் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை. இது குறித்துத் தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும். இந்தச் சிறப்பு பஸ்களை இயக்குவதன் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும்’’ என்றார்.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே அறிவித்தபடி பள்ளி மாணவர்களுக்கும், பெண்க ளுக்கும் 200 சிறப்பு பஸ்களை இயக்கிக் கொண்டுதான் வரு கிறோம். இதில், எந்த மாற்றமும் செய்யவில்லை. இது தொடர்பாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கவும் தயாராகவுள்ளோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in