

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், புதிய கட்சி தொடங்கியுள்ளார். கட்சியின் பெயர் மற்றும் கொடியை திருச்சியில் விரைவில் அறிவிக்கப் போவதாக கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3-ம் தேதி அறிவிப்பதாக வாசன் தெரிவித்திருந்தார்.
கடந்த 3 நாட்களாக ஆதரவாளர் களுடன் தீவிர ஆலோசனை நடத்திய வாசன், சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டலில் நேற்று இறுதி கட்ட ஆலோசனை மேற்கொண் டார். 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆலோசனையில் ஞானதேசி கன், பீட்டர் அல்போன்ஸ், ஞான சேகரன், முன்னாள் எம்.பி.க்கள் கார்வேந்தன், விஸ்வநாதன், ராம சுப்பு, எம்எல்ஏக்கள் ரெங்கராஜன், ஜான் ஜேக்கப் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் பகல் 12.15 மணியளவில் செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கொள்கை மூலம் தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே, புதிய அரசியல் பாதையை வகுத்து பணியாற்றுவோம்.
மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது, அவருக்கு ஆதரவு அளித் ததுபோல் தமிழக மக்கள் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். எங்களது புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் விரைவில் திருச்சியில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு வாசன் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
திருச்சி பொதுக்கூட்டம் எப்போது நடக்கும்?
தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
மூப்பனார் கட்சி தொடங்கிய போது நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்தார். இப்போது அவரது ஆதரவை நாடுவீர்களா?
தமிழகத்தின் அனைத்து துறை பிரபலங்களும் முக்கியஸ்தர் களும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இலங்கை பிரச்சினையை எப்படி கையாளுவீர்கள்?
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்போம். ஆனால், தடை செய் யப்பட்ட எந்த இயக்கத்தையும் ஆதரிக்க மாட்டோம்.
உங்கள் கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ்தானா?
புதிய கட்சியை முறையாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய நிறைய வரையறைகள் உள்ளன. அப்போது கட்சியின் பெயர் தெரியவரும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் நீக்கம்
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் அஜய்குமார் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை ஜி.கே. வாசன் அளிக்கவில்லை. அதே சமயம், புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற் காக அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார்.