பா.ம.க.வினால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தர முடியும்: ராமதாஸ் பேச்சு

பா.ம.க.வினால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தர முடியும்: ராமதாஸ் பேச்சு
Updated on
2 min read

‘‘திமுக, அதிமுக, கட்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு. தமிழகத்தில் பாமகவால் மட்டுமே மாற்றத்தைத் தரமுடியும்’’ என்று கட்சியின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுகவை கண்டித்துப் பேசினர். பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியே வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றனர்.

நான் சாதி வெறியனா?

பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

பதவிக்கு ஆசைப்படாமல் கட்சி நடத்திவருகிறேன். ஆனால் எனக்கு மரவெட்டி, சாதி வெறியன், சாதிதாஸ் என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள். தர்மபுரி சம்பவத்தை காதல் நாடகம் என்றேன். இயக்குநர் சேரன் மகள் பிரச்சினைக்குப் பிறகுதான் என் கருத்தை அனைவரும் புரிந்து கொண்டனர். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை திருத்துவோம்.

தமிழகம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதால்தான் இலவசம் கொடுக்கவேண்டி உள்ளது. தேசிய அளவில் 2 ஜி, நிலக்கரி ஊழல் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், தமிழகத்தில் தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் ஊழல் நான்கு லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை.

திமுக, அதிமுக சாபக்கேடு

திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தின் சாபக்கேடாகும். இலவசம், மது, சினிமா மோகத்தை ஊட்டி மக்களைக் கெடுத்துவிட்டனர். காங்கிரஸின் நிலை மோசம். பா.ஜ.க. 5 எம்.எல்.ஏ. க்களை தாண்டியதில்லை. கம்யூனிஸ்ட்கள் ஒற்றை இலக்கை தாண்டியதில்லை. வைகோ அதிக சீட் கிடைக்கவில்லை என கூட்டணியிலிருந்து வெளி யேறியவர்.

நடிகரின் கட்சியோ பட்டமரம் என்கிறார்கள், சாராயக்கடை திறந்திருந்தால், குடித்தால் என்ன தப்பு என சொல்பவர்; நல்ல நடிகர். பா.ம.க. மட்டுமே நல்ல கொள்கை கொண்ட, வெகுஜன மக்களின் ஆதரவு கொண்ட கட்சி. பா.ம.க. தலைமையிலான சமூக ஜனநாயக் கூட்டணிதான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

சாதி அரசியல் தவறில்லை

பாமக தலைமைப் பொதுக் குழுக் கூட்டத்தில் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா உள்பட அனை வரும் அரசியல்வாதிகள். ஆனால் ராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஒரு அரசாங்கமே ஒரு சாதியை ஒடுக்குவது இங்குதான் நடக்கிறது. நாங்கள் சாதி அரசியல் நடத்தவில்லை. சாதி அரசியல் நடத்தினாலும் அதில் தவறில்லை.

ராமதாஸை காரணமின்றி சிறையில் அடைத்து, ஜெயலலிதா கொலை முயற்சி செய்துள்ளார். வெளியே வந்தவுடன் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. டெல்லியைப் போல் தமிழகத்தில் பா.ம.க. ஒரு மாற்றத்தை தரப்போகிறது. திமுகவில் 2ஜி ஊழல், இன்னொருவர் குடித்தால் தப்பா என்று கேட்கிறார். காங்கிரஸில் ஒவ்வொருவர் தலைமையில் 10 கட்சிகள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படகில் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அனுப்பி தமிழக மீனவர்களைப் பாதுகாப்போம். இனி எந்த வழக்கும் வராமல் பா.ம.க.வினர் நடந்துகொள்ளுங்கள் என்றார்.

மோடியைவிட அன்புமணி சிறப்பான ஆட்சியை தருவார்

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘தமிழக அரசியல் கட்சிகள் வன்னியர்களுக்கு எதிரானவை. மாமல்லபுரம் மாநாட்டுக்கு பாமகவினர் எத்தனை யோ இடங்களைத் தாண்டித்தான் வந்தார்கள். மரக்காணத்தில் மட்டும் திட்டமிட்டு, பாமகவினருக்கு எதிராக கலவரம் தூண்டப்பட்டது. இப்பிரச்சினையில் என்னை 4 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். எத்தனை முறை அடைத்தாலும் பயப்பட மாட்டேன். கூட்டணிக் காக பல கட்சிகளும் பாமகவின் கதவைத் தட்டுகின்றன. ஆனால், பாமக திறக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தந்தால், மோடியைவிட சிறப்பான ஆட்சியை அன்புமணி தருவார்’’ என்றார்.

‘சிறைச்செம்மல் ஆக் ஷன் கிங்’

சென்னை, காமராஜர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசுகிறார். அருகில் கட்சியின் நிர்வாகிகள் ஜெ.குரு, ஜி.கே.மணி, மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

பாமக பொதுக்குழுவில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வடிவேல் ராவணன், ஏ.கே.மூர்த்தி, இசக்கி சுப்பையா, ஆர்.வேலு, இரா.அருள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

அன்புமணிதான் 2016-ல் முதல்வர் என்றும் சூளுரைத்து 14 உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காடுவெட்டி குருவை சிறைச்செம்மல் என்றும், ஏ.கே.மூர்த்தியை ஆக் ஷன் கிங் என்றும் அன்புமணி குறிப்பிட்டுப் பேசினார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாமக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘பல்வேறு சமுதாய சங்கங்கள் சேர்ந்த சமூக ஜனநாயக் கூட்டணி’ என்று மட்டும் பாமக நிர்வாகிகள் அறிவித்தனர். ‘திராவிடக் கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது’ என்பதை எல்லா நிர்வாகிகளும் வலியுறுத்திக் கூறினர்.

திருவண்ணாமலை தொகுதியில் எதிரொலி மணியன், கடலூரில் டாக்டர் கோவிந்தசாமி, சிதம்பரம் (தனி) தொகுதியில் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in