Published : 15 May 2017 09:24 AM
Last Updated : 15 May 2017 09:24 AM

வரலாற்று சாட்சியமாக விளங்கும் 456 ஆண்டு தேக்கு மரம்

கோவை வனத்துறை வளாகத்தில் அமைந்துள்ள ‘தி காஸ் பாரஸ்ட்’ மியூசியத்தில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெட்டி வைக்கப்பட் டுள்ள 456 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் ஒன்று சிறியவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தனது வரலாற்றுடன், இந்திய வரலாற்றையும் மவுன சாட்சியமாக சொல்லிக்கொண்டு இருக்கிறது.

நூற்றாண்டு பழமைமிக்க இந்த அருங்காட்சியகத்தை ஹோரேஸ் ஆர்சிபேல்ட் காஸ் என்ற பிரிட்டன் வன அலுவலர் 1902-ல் நிர்மாணித்தார். காட்டெருமை, சிறுத்தை, புலி, மயில்கள், முயல்கள், புள்ளி மான், கடமான், சருகு மான்கள், உடும்பு, மலைப்பாம்புகள் இங்கு ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளன. அரிய பாம்பு வகைகள், சிறு பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், மூலிகை மரங்கள், செடி, கொடிகள், 456 வயதுடைய தேக்கு மரம், சந்தன மரம், ஈட்டி மரத்தின் அடிமரக் கட்டைகள் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 456 வயது உடைய தேக்கு மரத்தில்தான் அதன் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஒவ்வொரு லேயருக்கும் ஒரு வயது என மொத்தம் 456 வயதை கணக்கிட்டு ஒரு தாளில் பதிவிட்டுள்ளனர். இந்த வயதுகளை ஒப்பிட்டு, இந்தியாவில் நடந்த முக்கிய வரலாற்றுத் தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இதை காண வருபவர்களிடம் இந்த மரத்தின் வயதைச் சொல்லி, அந்தந்த காலத்தில் நடந்த வரலாறும் எடுத்துச் சொல்லப்படுகிறது. அதை பெரியவர்கள் தங்களது குழந்தைகளுக்கும் சொல்லித் தருகின்றனர்.

இந்த மியூசியத்தை பராமரிக்கும் அலுவலர்கள் கூறும்போது, ‘‘மனிதர்களின் செயல்களை மவுன சாட்சியங்களாக மரங்கள் கவனிக்கின்றன. அவை ஒவ்வோர் ஆண்டும் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தன்னை சுருக்கி, பின்னர் இயல்பு நிலைக்கு மாறி வளர்கின்றன. அவற்றின் குறுக்குவெட்டுத் தோற்ற சுருக்கக் கோடுகள் மூலமாக இதை அறிய முடிகிறது. அதை வைத்தே இந்த மரத்தில் முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் எழுதி வைத்துள்ளனர்.

இதன்மூலம், வருங்கால சந்ததிகள் மரத்தையும், நமது வரலாற்றையும் அறிய ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பெரியவர்கள், குழந்தைகள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கிறார்கள்’’ என்றனர்.

இதே மியூசியத்தில் 1.75 டன் எடையுடன் 34 அடி உயரம் உள்ள சந்தன மரம் வைக்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் வனச்சரகத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதன் உயரத்துக்கு ஏற்பவே மியூசியத்தின் கூரையும் உயர்த்தி வேயப்பட்டிருக்கிறது.

“மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள்தான் இயற்கை வளம் நிறைந்த பிரதேசம் என்று நாம் நினைக்கிறோம். கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்துள்ள பகுதிகளிலும் உயரமான சந்தன மரங்கள் உள்ளன என்பதற்கு இதுவே சாட்சி. இதை உயரமாகவே வைக்க வேண்டும் என்பது இதை உருவாக்கிய ஆங்கிலேயர் காஸின் அக்கறையை காட்டுகிறது. இப்போது இதை நிர்மாணித்திருந்தால் இப்படி ஒரு உயரமான மரத்தை மியூசியத் துக்குள் வைத்திருப்பார்களா? அதற்கேற்ப கூரை போட்டிருப் பார்களா?’’ என வியந்து பேசுகிறார்கள் இதை ஆய்வுக்கு உட்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x