Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

சென்னையில் வெப் கேமரா மூலம் தேர்தலை கண்காணிக்க முடிவு- மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

16-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் குறித்த கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மார்ச் 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

புதிய திட்டங்கள் கூடாது

எனவே, புதிய திட்ட தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாக்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்த முடியாது. மேலும் சாலை அமைத்தல், குடிநீர் வசதி செய்துதருதல் போன்ற வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது. ஆங்காங்கே இருக்கும் அரசு அதிகாரிகள்தான் இதற்கான பணிகளைச் செய்வார்கள். புதிய பணி நியமன ஆணை மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கக் கூடாது. நடத்தை விதிகளை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

9-ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் தற்போது 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 18,13,076, பெண்கள் 18,22,461, பிறர் 662 பேர். மேலும், புதிய வாக்காளர்கள் வரும் மார்ச் 25-ம் தேதி வரையில் சேர்க்கப்படுவார்கள். வரும் 9-ம் தேதி புதிய வாக்காளர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. வாக்காளர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதி களில் உள்ளடங்கிய 16 சட்ட மன்ற தொகுதிகளில் 3,254 வாக்குச்சாவடிகள் அமைக்கப்

பட்டுள்ளன. மேலும், 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து 84 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப் படவுள்ளன. தேர்தல் பணிகளை நடத்த 22,863 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அடங்குவர்.

தேர்தல் செலவினங்கள் கட்டுப்பாடு குறித்து கண்காணிக்க சென்னை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகு திக்கும் தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரம் நிலையான விழிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, காணொலி ஆய்வுக் குழு மற்றும் கணக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணமில்லாத தொலைபேசி

இந்த குழுக்கள் தேர்தல் முறைகேடுகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும். தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் கண்காணிக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி (தொலைபேசி எண். 18004257012) வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்கள் புகார்களை இந்த மையத்திற்கு தெரிவிக்கலாம்.

255 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

சென்னை மாவட்டத்தில் இருக்கும் 3 நாடாளுமன்ற தொகுதி களில் மொத்தம் 255 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும், 28 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, தென் சென்னையில் 88 வாக்குச் சாவடிகளும், வடசென்னையில் 45 வாக்குச் சாவடிகளும், மத்திய சென்னையில் 122 வாக்குச் சாவடிகளும் பதற்ற மானவை என தெரியவந்துள்ளது.

எழும்பூர் தொகுதி யில்தான் அதிக பட்சமாக 38 வாக்குச் சாவடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கெல்லாம் மற்ற வாக்குச் சாவடிகளைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்புப் படை பணியில் ஈடுபடுத்தப்படும், வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும், மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்படுவர். மேலும், வரும் தேர்தலில் சென்னையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

சுவர் விளம்பரம் கூடாது

சென்னையில் மொத்தம் எவ்வளவு பாதுகாப்புப் படையி னரை பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். போதிய அளவுக்கு மத்திய பாதுகாப்பு படையை அழைக்க முடிவு செய்துள்ளோம். தேர்லையொட்டி எந்த சுவர்களிலும் விளம்பரம் செய்ய அனுமதிக்க முடியாது. மேலும், அரசியல் கட்சி சின்னங்களை மறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x